நியூசிலாந்தில் கனமழை, வெள்ளம்: 3 பேர் பலி.
நியூசிலாந்து நாட்டில் தொடர்ந்து சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் பெரிய நகராக அறியப்படும் ஆக்லாந்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தொடர் கனமழையால் அந்நகரில் அவசர காலநிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஆக்லாந்து விமான நிலையம் சுற்றிலும் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது. இதனால், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான பயணிகள் அதிக சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். தீவு நாடான நியூசிலாந்தில் வெள்ளம் சூழ்ந்து ஒரு புதிய குட்டி தீவு போல் விமான நிலையம் காட்சியளித்தது. ஆக்லாந்தில் வெள்ள பாதிப்புகளை பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் ஆய்வு செய்துள்ளார். இதன்பின்பு, அவசரகால படையினருடன் ஆலோசனை கூட்டமும் நடத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசும்போது, பருவகால மழையால் ஏற்பட்டு உள்ள உயிரிழப்பு அதன் பாதிப்பின் தீவிர தன்மையை எடுத்து காட்டியுள்ளது. தொடர் கனமழைக்கு 3 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒருவரை காணவில்லை என்று கூறியுள்ளார். கனமழை பாதிப்புகளை சீர் செய்வதே பெரிய வேலையாக இருக்க போகிறது என்பது தெளிவாக தெரிகிறது என்று ஹிப்கின்ஸ் கூறியுள்ளார்.
ஆக்லாந்தின் வடக்கே வெனுவாபை பகுதிக்கு இன்று பயணித்த பிரதமர் ஹிப்கின்ஸ், வெள்ளம் பாதித்த மக்களை சந்திக்க இருக்கிறார். ஒரு நிச்சயமற்ற நாளை அவர்கள் எதிர்கொண்டு உள்ளனர். பாதிப்புகளை பற்றி ஆய்வு செய்வதற்காகவே அவர்களது பொழுது இன்று விடிந்து உள்ளது என்று கூறியுள்ளார். ஆக்லாந்தில் உள்ள ஒவ்வொருவருடன் எனது நினைவுகள் உள்ளது என அவர் கூறியுள்ளார். எனினும், வானிலையால் ஆக்லாந்துக்கான தனது பயணத்தில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.