13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முன்னர் ஆழமாக ஆராய வேண்டும்-சாகர காரியவசம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத 13வது திருத்தச் சட்டத்தை தற்போது நடைமுறைப்படுத்த தயாராகினால், அதற்கு முன்னர் அது குறித்து ஆழமாக ஆராய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஜே.ஆர்.ஜெயவர்தன முதல் கோட்டாபய ராஜபக்ச வரை பதவியில் இருந்த ஜனாதிபதிகள் தாம் பதவி வகித்த காலத்தில் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.
இதனால்,அதற்கு காரணமாக அமைந்த விடயங்கள் தற்போதும் சமூகத்திற்குள் இருக்கின்றதா என்பதை ஆழமாக ஆராய்ந்த பின்னர் அதனை முற்றாக நடைமுறைப்படுத்துவது குறித்து தீர்மானிக்க வேண்டும் என தான் கடந்த 26 ஆம் திகதி நடைபெற்ற சர்வக்கட்சி மாநாட்டில் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை ஆழமாக ஆராயாது அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான இணக்கத்தை தான் சர்வக்கட்சி மாநாட்டில் வழங்கவில்லை எனவும் சாகர காரியவசம் கூறியுள்ளார்.