செவ்வாய்க்கிழமை போக்குவரத்துகள் ஸ்தம்பிக்கும்.

Kumarathasan Karthigesu

நாடளாவிய இரண்டாம் கட்ட வேலை நிறுத்தப் போராட்டம் நகரசபைகளும் இணைவு.

மக்ரோன் அரசின் ஓய்வூதியச் சீரமைப்புத் திட்ட நகல் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. திட்டத்தின் உளளடக்கங்களில் சில திருத்தங்களைச் செய்வது தொடர்பாகத் தொழிற்சங்கங்களுடன் பேசுவதற்கு அரசு தயாராக உள்ளது. ஆனால் ஓய்வு பெறும் வயது எல்லையை 64 இல் இருந்து குறைப்பது என்ற பேச்சுக்கு இடமில்லை என்று பிரதமர் எலிசபெத் போர்ன் தெரிவித்திருக்கிறார். வயதைக் குறைப்பது பற்றிய பேரம் பேசுதலுக்கு இடமே இல்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

இதனால் தொழிலாளர்களது எதிர்ப்பு நடவடிக்கைகள் அடுத்தடுத்த கட்டங்களுக்குத் தீவிரமடையவுள்ளன.

எட்டுக்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்துகின்ற நாடளாவிய இரண்டாவது பெரிய வேலை நிறுத்தமும் பேரணிகளும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளன. இதனால் பொது நிர்வாகம், கல்வி, போக்குவரத்து போன்ற பிரதான துறைகள் ஸ்தம்பிதமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரிஸ் மெற்றோ ரயில்கள் உட்பட RATP, SNCF போக்குவரத்து சேவைகள் அன்றைய தினம் பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தூர இடங்களுக்கான கடுகதி ரயில் (TGV) சேவைகளும் குறைக்கப்பட உள்ளன. எனவே திட்டமிட்ட பயணங்களை ஒத்தி வைக்குமாறு பயணிகளுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் பிராந்தியப் போக்குவரத்து நிறுவனங்களின் தகவலின் படி  மெற்றோ ரயில் சேவைகள் கடந்த தடவை போன்று செவ்வாய்க்கிழமையும் குறைக்கப்படவுள்ளன. காலையும் மாலையும் பயண நெருக்கடி அதிகமாகவுள்ள சமயத்தில் மாத்திரமே ரயில்கள் ஓரளவு வழமை போன்று சேவையில் ஈடுபடும்.

பாரிஸ் நகரசபை உட்பட இடதுசாரிகள் வசமுள்ள நகரசபைகள் பலவும் செவ்வாய்க்கிழமைப் போராட்டத்தில் இணைந்துகொள்ளவுள்ளன. நூற்றுக்கு மேற்பட்ட நகரசபைகள் உள்ளூராட்சி சபைகள் அன்றைய தினம் மூடப்பட்டு அவற்றின் பணியாளர்கள் அடையாளப் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட அனுமதிக்கப்படுவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தொழிலாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்ற மாபெரும் பேரணி ஒன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு பிளாஸ் து இத்தாலியில் (Place d’Italie) இருந்து தொடங்கி முக்கிய தெருக்கள் வழியாகச் சென்று இரவு ஏழு மணியளவில் பாரிஸ் ஏழாவது நிர்வாகப் பிரிவில் உள்ள Place Vauban இல் நிறைவு பெறும்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">