சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்து வருபவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

கையடக்கத்தொலைபேசிகளை ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்படாமல் பார்சல் மூலம் நாட்டிற்கு இறக்குமதி செய்து வரிவருவாயை இழந்து, நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் ஒன்றியம் உண்மைகளை விளக்கியுள்ளது.

இதன்படி அமைச்சர் மனுஷ நாணயக்கார, இது தொடர்பான பிரச்சினைகளை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு அனுப்பி தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

2021ஆம் ஆண்டு இவ்வாறு கையடக்கத் தொலைபேசிகளை இறக்குமதி செய்ததன் மூலம் உண்டியல் முறையின் ஊடாக 220 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ள வரி வருமானம் ரூ. 7.8 பில்லியன் எனவும் கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் ஒன்றியம் அமைச்சரிடம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இது தொடர்பில் அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.