கிழக்கினை மீட்கப்போகின்றோம் என்று கூறிக்கொண்டு மக்களின் வாக்குகளைப்பெற்றவர்கள் இன்று மண் கொள்ளையிடுவதிலும் காணி கொள்ளையிடுவதையுமே நோக்காக கொண்டு செயற்படுகின்றனர்.

இரா.சாணக்கியன்

பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்று இராஜாங்க அமைச்சுகளைப்பெற்றவர்கள் தமிழர்கள் காணிகள் பறிபோதற்கு மட்டுமே துணைநின்றதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டத்தினை வேட்பாளர் அறிமுகத்துடன் ஆரம்பித்துவைத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டமும் பொதுக்கூட்டமும் சித்தாண்டியில் நடைபெற்றது.

சித்தாண்டி முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து தேர்தல் பிரசாரக்கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்குடா தொகுதிக்கான செயலாளர் நல்லரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம்,சீ.யோகேஸ்வரன்,ஞா.சிறிநேசன்,பா.அரியநேத்திரன்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நடராஜா தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் வடகிழக்கு தலைவர் கி.சேயோன் உட்பட பெருமளவான கட்சி ஆதரவாளர்கள்,வேட்பாளர்கள்,பொதுமக்கள் என கலந்துகொண்டனர்.

இதன்போது எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் கல்குடா தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் இதன்போது அறிமுகம் செய்துவைக்கப்பட்டதுடன் தேர்தல் பரப்புரைகளும் முன்னெடுக்கப்பட்டன.

கிழக்கினை மீட்கப்போகின்றோம் என்று கூறிக்கொண்டு மக்களின் வாக்குகளைப்பெற்றவர்கள் இன்று மண் கொள்ளையிடுவதிலும் காணி கொள்ளையிடுவதையுமே நோக்காக கொண்டு செயற்படுகின்றனர்.