அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்ப்பாண மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக தீபன் திலீசன்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்ப்பாண மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக தீபன் திலீசன் போட்டியிடவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கட்சியின் மத்திய குழுவில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது நீண்டகாலமாக கட்சியுடன் இணைந்து செயல்பட்டு, முக்கியமான காலகட்டத்திலும் கட்சியுடன் இணைந்து பயணித்ததன் அடிப்படையில் மத்திய குழுவில் யாழ். மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக அவர் களமிறக்கப்படவுள்ளார்.

அத்தோடு பிரதி முதல்வர் பதவிக்கு கட்சியின் நீண்ட கால உறுப்பினர் வை.கிருபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி நிலையில் மாநகர சபை எல்லைக்குள் வாழுகின்ற மக்களுக்கு ஒரு நேர்மையான ஒரு பணியினை ஆற்றலாம் என கடைசி வரை எதிர்ப்பார்க்க முடியாது.

மாநகர சபை நிர்வாகம் நேர்மையான ஒரு பாதைக்குள் செல்லாமல் தங்களுக்கு நன்மையை தேடாமல் இருக்கின்ற வளங்களை வைத்து எந்த அளவுக்கு அதனை மக்களுக்கு திருப்திபடுத்தி கொடுக்கலாம்.

இருக்கிற வளங்களை எவ்வாறு அதிகரித்து பங்களிப்பு செய்யலாமென்று ஒரு மனப்பாங்குடன் ஒரு தரப்பு ஆட்சிக்கு வராமல் மாநகர சபை செயற்பாட்டினை மாற்றியமைக்க முடியாது.

யாழ்.மாநகர சபையை முற்று முழுதாக கைவிட்டு ஊழல் கலாசாரமே காணப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இன்று பொருளாதார ரீதியில் மக்கள் இன்னல்படும் வேளையி்ல் மாநகர சபையில் ஆட்சியமைத்து மக்களுக்கு நேர்மையாக பணியாற்றலாம் என்ற எண்ணத்துடன் களமிறங்கியிருக்கின்றோம்.

அந்தவகையில் எம்மைப் போல் ஓர் தரப்பு ஆட்சிக்கு வராமல் மாநகரின் இந் நிலைமையை மாற்றியமைக்க முடியாது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் பாதையை எமக்கு எதிரான தரப்பு கூட ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்படிப்பட்ட தரப்பு யாழ் மாநகர ஆட்சியை வகித்தால் மட்டுமே ஊழலற்ற ஆட்சியை முன்னெடுக்க முடியும்

இந்த உள்ளூராட்சி தேர்தல் மற்றவர்கள் கூறும் சாதாரண பாணியில் இத் தேர்தல் அபிவிருத்திககான தேர்தல் அல்ல. மக்களும் தமது ஊரின் அபிவிருத்தியை நோக்காக கொண்டே வாக்களிப்பார்கள்.

தேர்தல் நிறைவடைந்த பின் ஒவ்வொரு தரப்பும் மக்களின் உள்ளூராட்சி தேர்தல் ஆணையை வைத்துக்கொண்டு தேசிய ரீதியில் எமக்கு ஆணை கிடைத்துவிட்டது என்ற நோக்கில் தம் நிலைப்பாட்டை செயற்படுத்த தயாராக உள்ளனர்.

கடந்த 2018 தேர்தல் முடிவை அடிப்படையாகக்கொண்டு செயற்பட்டு ரணில் விக்ரமசிங்காவுடன் இணைந்து ஒற்றையாட்சிக்குள் இணைந்த தீர்வை முன்வைக்க முயன்றதை மறந்துவிடக் கூடாது.

அந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்னடைவை சந்தித்ததால் மக்கள் ஒற்றையாட்சி முறைக்குள் முடக்கும் நிலை தவிர்க்கப்பட்டது.

இன்று தமிழர் தரப்பு என கூறுபவர்கள் தீர்வுத் திட்டமெனக் கூறி ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்குவதற்காக வேலைகளை முன்னெடுக்கின்றார்கள். இதற்கு மேலாக எதி்வரும் தேர்தலில் கிடைக்கும் வாக்குகளையும் தமக்கான ஆணையாக எடுத்து ஒற்றையாட்சி முறைக்குள் முடக்க முயற்சிசெய்து கொண்டிருக்கின்றார்கள்.

இத் தரப்பிற்கு மக்கள் ஆணையை வழங்கிவிட்டால் எதிர்காலத்தில் ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்காக வேலைத்திட்டம் அதி தீவிரப்படுத்தப்பட்டுவிடும் என்பதை மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

இன்று காலை மேற்கத்தேய தூதுவர் தமிழர் பிரதிநிதிகளை யாழ்ப்பாணத்தில் சந்தித்திருந்தார். இதில் தமிழ்க் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி சுரேஸ் பிரேமச்சந்திரன் பங்கெடுத்திருந்தார்.

தூதுவர்  அந்த நேரத்தில் அரசு தமிழர்களுக்கு தேவையான அடிப்படை விடயம் தொடர்பாக வினாவிய போது

அதற்கு கூலிப்படை முன்வைத்த கருத்து 13 ம் திருத்தச்சட்டமாகவே இருந்தது.

அந்த இடத்தில் நான் மாற்றுக்கருத்தை முன்வைப்பதற்கு தள்ளப்பட்டேன். இவர்கள் ஒவ்வொருவரும் ஒற்றையாட்சியை நிராகரித்து சமஷ்டி தீர்வு என வாக்குகளை பெற்றுவிட்டு இவ்வாறான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒற்றையாட்சி முறைக்கு ஆமோதிக்கும் நிலையைத் தொடர்ந்தவண்ணமுள்ளனர்.

இனத்தை விற்றுக்காண்டிருக்கும்  இவ்வாறனவர்களுக்கு வாக்களிப்பதானது ஈபிடிபி மற்றும் கருணா கும்பலுக்கு வாக்களிப்பதற்கு சமனானதாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் 13 ம் திருத்தச்சட்டம் என்ற பேச்சே இருக்கவில்லை. தற்போது இனப்படுகொலை என்பது தொடர்பிலும் கருத்திலெடுக்காமல் ஒற்றையாட்சிக்கு துணைபோகும் நிலை காணப்படுகின்றது. ஆகவே இவை அனைத்திற்கும் தேர்தல் மூலமே மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.