ஆசனப் பட்டி அணியாததால் பிரிட்டிஷ் பிரதமருக்கு அபராதம்.
ஓடும் காரில் இருந்தவாறு இன்ஸ்ரகிராமில் வீடியோ
காரின் பின்னால் ஆசனப் பட்டி (seatbelt)அணியாமல் அமர்ந்து பயணம் செய்தமைக்காகப் பிரிட்டிஷ் பிரிட்டிஷ் ரிஷி சுனாக்கிற்குப் பொலீஸார் அபராதம் விதித்துள்ளனர்.
பிரதமர் தனது பிழையை முழுமையாக ஏற்றுக் கொண்டு அதற்காக வருத்தம் வெளியிட்டுள்ளார். அவர் தண்டப் பணத்தைச் செலுத்துவார்-என்று இலக்கம் 10, டவுணிங் வீதி பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வாகனங்களில் ஆசனப் பட்டி அணியாமல் பயணம் செய்பவர்கள் தவறை ஏற்றுக்கொண்டால் உடனடியாக நூறு பவுண்ட்ஸ் தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டும். அதை மறுத்து நீதிமன்றம் சென்றால் அது 500 பவுண்ட்ஸ் வரை அதிகரிக்கலாம்.
ரிஷி சுனாக் அண்மையில் இங்கிலாந்தின் வடக்குப் பகுதிகளில் விஜயம் மேற்கொண்டிருந்த சமயத்தில் லான்காஷயார் (Lancashire) பகுதியில் காரில் பின்னால் அமர்ந்தவாறு வீடியோப் பதிவு ஒன்றைத் தனது இன்ஸ்ரகிராம் சமூகவலைத் தளத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவிலேயே அவர் ஆசனப் பட்டி அணியாமல் இருப்பது பகிரங்கமாகத் தெரியவந்தது.
நாட்டின் செலவீனங்களை ஒரு நிலைப்படுத்துவது தொடர்பான தனது அரசின் பிந்திய திட்டங்கள் பற்றி அந்த வீடியோவில் அவர் பேசியிருந்தார். பிரதமரது பொறுப்பற்ற இந்தச் செயல் பொறிஸ் ஜோன்சனின் அதே அலட்சியத்தைப் பின்தொடர்வதைக் காட்டுகிறது என்று எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன.
ரிஷி சுனாக் அண்மைக் காலத்தில் பொலீஸ் அபராதம் செலுத்துவது இது இரண்டாவது முறை ஆகும். கடந்த ஏப்ரலில் அப்போதைய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மற்றும் அவரது துணைவியார் சகிதம் கொரோனாத் தொற்று நோய்ச் சுகாதார விதிகளை மீறி பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றில் கலந்து கொண்டமைக்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.