உக்ரைன் உள்துறை அமைச்சர் உட்பட 18 பேர் ஹெலி விபத்தில் பலி!
Kumarathasan Karthigesu
தலைநகர் கீவ் அருகே பாலர் பாடசாலை மீது வீழ்ந்து நொறுங்கியது!!
3 குழந்தைகளும் மரணம் 15 பாலகர்களுக்கு காயம்!!!
உக்ரைன் உள்துறை அமைச்சர், பிரதி அமைச்சர், அமைச்சு அதிகாரிகள் அடங்கிய 9 பேர் பயணம் செய்த ஹெலிக்கொப்ரர் ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது. தலைநகர் கீவ் அருகே குழந்தைகள் பராமரிப்பகம் ஒன்று அமைந்துள்ள இடத்தில் இந்த அனர்த்தம் நிகழ்நதது. ஹெலி வீழ்ந்து நொறுங்கிய குடியிருப்புப் பகுதியில் தரையில் மூன்று குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.
உள் துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கியும் (Denys Monastyrsky) அவரது குழுவினரும் போர் முனைப் பகுதி ஒன்றுக்குச் சென்றுகொண்டிருந்த சமயத்திலேயே அவர்களது ஹெலிக்கொப்ரர் இந்த அனர்த்தத்தில் சிக்கியது.
போர் தீவிரமாக நடைபெற்று வருகின்ற சமயத்தில் உள்துறை அமைச்சரும் அமைச்சின் அதிகாரிகள் அனைவரும் கூண்டோடு பலியாகியிருப்பது அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
விமானி உட்பட ஒன்பது பேர் ஹெலிக்கொப்டரில் பயணம் செய்துள்ளனர். அவர்களில் எவரும் உயிர் பிழைக்கவில்லை. காயமடைந்த 15 குழந்தைகள் உட்பட 29 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஹெலிக்கொப்டர் வீழ்ந்த இடத்தில் பரவலாக சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பெரும் எண்ணிக்கையான மீட்புப் பணியாளர்கள் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விபத்து நடந்த பிரதேசத்தில் கடும் பனி மற்றும் மேக மூட்டமும் நிறைந்த வானிலை காணப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. உக்ரைன் அதிபர் ஷெலென்ஸ்கி இன்றைய விடியலை ஒர் “இருண்ட காலை” என்று வர்ணித்திருக்கிறார். இந்தக் கொடுமையான துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோர் “உண்மையான சேசபக்தர்கள். அவர்களது ஆன்மாக்கள் நிம்மதியாக உறங்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
விபத்து நிகழ்ந்த சூழ்நிலை குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு பாதுகாப்பு அதிகாரிகளை அவர் கேட்டுள்ளார். 42 வயதான அமைச்சர் மொனாஸ்டிர்ஸ்கி (Denys Monastyrsky) ஒரு சட்டத்தரணி ஆவார். அதிபர் ஷெலென்ஸ்கியின் கட்சியைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர் .இரண்டு குழந்தைகளின் தந்தையான அவர் கடந்த 2021 ஜூலை முதல் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.