பாடசாலைகள் முழு அளவில் ஸ்தம்பிக்கும்!ரயில்கள் பல ஓடாது!

Kumarathasan Karthigesu

 

ஆசிரியர், மாணவர்களும் வீதிப்பேரணியில் இணைவு .

ஆரம்பப் பள்ளிகள் மூடப்படும்.

மெற்றோ சேவைகள் குறைப்பு

ஓய்வூதிய மறுசீரமைப்பை எதிர்த்து நாளை வியாழக்கிழமை நாடு முழுவதும் இடம்பெறவிருக்கின்ற தொழிற்சங்க எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாடசாலை ஆசிரியர்களும் உயர்தர மாணவர்களும் இணைந்துகொள்ளவுள்ளனர் என்று அறிவிக்கப்படுகிறது. இதனால் நாளைய தினம் கல்விச் செயற்பாடுகள் முழு அளவில் ஸ்தம்பிதமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பப் பாடசாலைகளைச் சேர்ந்த 70 வீதமான ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் இணையவுள்ளனர் என்று ஆசிரியர்களுக்கான தொழிற்சங்கம் (Syndicat national unitaire des instituteurs, professeurs des écoles et PEGCSNUIPP-FSU) தெரிவித்திருக்கிறது. இதன்காரணமாக பாரிஸ் பிராந்தியத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆரம்பப் பாடசாலைகள் மூடப்படலாம் என்று சங்கம் எதிர்வு கூறியுள்ளது.

மாணவர் ஒன்றியங்கள் உயர்தர பாடசாலைகளை இயங்கவிடாமல் தடுத்துப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன எனத் தகவல் வெளியாகி உள்ளது.

?மெற்றோ ரயில்கள்

பாரிஸ் பிராந்திய ரயில் சேவைகளும் பெரும் தடை மற்றும் நெருக்கடிகளைச் சந்திக்கவுள்ளன. பாரிஸ் பிராந்திய சுயாதீன போக்குவரத்து நிறுவனம் (Régie autonome des transports parisiens-RATP) விடுத்துள்ள முன்னறிவிப்பில் மெற்றோ உட்பட ரயில் சேவைகள் பெரிய அளவில் தடைப்படும் என்று தெரிவித்துள்ளது. மெற்றோ வழித்தடங்களில் 8, 10, 11 ஆகியன முழு நாளும் மூடப்பட்டிருக்கும். 2, 3, 3bis, 5, 6, 7, 7bis, 9, 12, 13 ஆகிய வழித் தடங்களில் காலையும் மாலையும் பயண நெருக்கடியான நேரத்தில் (during peak hours) மட்டுமே ரயில்கள் சேவையில் ஈடுபடும். வழித்தடம்(lignes) 1,14 ஆகியன வழமை போன்று செயற்படும். வழித்தடம் 4 இல் ரயில்கள் குறைக்கப்பட்டிருக்கும்.

RER A, B ரயில்கள் நெருக்கடி நேரத்தில் (peak times) இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் குறைக்கப்படும். நெருக்கடி அற்ற நேரங்களில் (off-peak hours) நான்கில் ஒரு ரயில் மட்டுமே ஓடும். பஸ் சேவைகளும் மூன்றில் இரண்டு என்ற எண்ணிக்கையில் குறைக்கப்பட்டிருக்கும்.

இதேவேளை, அரசு நிர்வாகம் உட்பட  பல்வேறு பணித் துறைகளைச் சார்ந்த தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. விமான நிலையப் பணியாளர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதால் வான் சேவைகளும் குறைக்கப்படவுள்ளன. பாரிஸ் ஓர்லி  (Orly) விமான நிலையத்தில் ஐந்து வான் சேவைகளில் ஒன்று நாளைய தினம் குறைக்கப்படும்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">