பொத்துஹெரவில் நிர்மாணிக்கப்பட்ட போலி தலதா மாளிகை இடித்தழிப்பு.
குருநாகல், பொத்துஹெரவில் நிர்மாணிக்கப்பட்ட போலி தலதா மாளிகையின் எண் கோண மண்டபத்தை இடித்து அழிக்கும் பணிகள், ஞாயிற்றுக்கிழமை (08) காலை முதல் ஆரம்பிக்கப்பட்டன.
குறித்த போலி தலதா மாளிகை தொடர்பாக பௌத்த உயர்பீடம் மற்றும் தலதா மாளிகையின் தியவதன நிலமே ஒப்பமிட்ட கடிதம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டது.
உலகளாவிய பௌத்தர்களை ஏமாற்றி, பெறுமதியான பொருட்களையும் பணத்தையும் பெற்றுக்கொண்டு ஜனக சேனாதிபதி என்ற ஒருவரால் போலியான தலதா மாளிகை கட்டப்பட்டு வருவதாகவும் தலதா மாளிகை தொடர்பில் சமூக ஊடகங்களில் சேபால் அமரசிங்க என்பவரால் வெளியிடப்பட்ட கருத்து பௌத்தர்களை காயப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இவ்விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்ததையடுத்து, சேபால அமரசிங்க, சீ.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சனிக்கிழமையன்று (07) குறித்த இடத்துக்கு விஜயம் செய்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, இன்னும் 2 வாரங்களில் இந்த இடத்துக்கு மீண்டும் வரும்போது கட்டடம் இடிக்கப்படாவிட்டால் அதனை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்தே மேர்வின் சில்வாவின் உத்தரவுக்கு அமைய ஜனக சேனாதிபதியினால் கட்டடத்தை இடித்து அழிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.