இலங்கை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கும் 182 பொருளாதார வல்லுநர்கள்.
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு, உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஹெட்ஜ் நிதிகள் மற்றும் பிற தனியார் முதலீட்டாளர்கள், முக்கியமான உதவியை வழங்குவது தொடர்பில் சுமார் 182 பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தி கார்டியனுக்கு அனுப்பிய அறிக்கையில் அவர்கள், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
எனவே இந்த ஹெட்ஜ் நிதியும், ஏனைய தனியார் முதலீடுகளும் இலங்கையை மோசமான நிலைக்கு செல்லவே வழிவகுக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஹெட்ஜ் நிதி என்பது ஒரு கூட்டு முதலீட்டு நிதியாகும், இது ஒப்பீட்டளவில் திரவ சொத்துக்களில் வர்த்தகம் செய்வதற்கு உதவுகிறது. ஹெட்ஜ் நிதிகள் மாற்று முதலீடுகளாகக் கருதப்படுகின்றன.
இந்தநிதிகள், நிரந்தர முதலீட்டு திட்டங்களாக அமையாமல், தேவையான போது முதலிடவும், தேவையான போது திரும்பப் பெற்றுக்கொள்ளவும் வசதியளிக்கின்றன.
அத்துடன் இலங்கையிடம் இருந்து அதிக வட்டி வருமானத்தையும் பெற்று வருகின்றன.
இந்தநிலையில், குறித்த பொருளாதார வல்லுநர்கள், இலங்கையில் பொருளாதார மீட்சிக்கான வாய்ப்பை வழங்க விரிவான கடன் ரத்து மற்றும் மறுசீரமைப்பு தேவை என்று வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் கடன் நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச சமூகத்தின் விருப்பத்தின் சோதனையை இலங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை இந்தியப் பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ், அதிகம் விற்பனையாகும் புத்தகமான கெப்பிட்டலின் ஆசிரியர் தோமஸ் பிகெட்டி மற்றும் கிரேக்கத்தின் முன்னாள் நிதியமைச்சர் யானிஸ் வரூஃபாகிஸ் உள்ளிட்ட குழுவினர், முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் ஹெட்ஜ் நிதிகள் போன்ற தனியார் கடன் வழங்குபவர்கள், இலங்கை, மறுசீரமைப்பு தொடர்பான ஒரு ஒப்பந்தத்துக்கு வருவதை தடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஹெட்ஜ் நிதியம் மற்றும் தனியார் கடன் வழங்குனர்கள், இலங்கையின் வெளிநாட்டுக் கடன்களில், கிட்டத்தட்ட 40 சதவீதத்தை கொண்டுள்ளனர் என்றும் பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தநிலையில், வோஷிங்டனை தளமாகக் கொண்ட சர்வதேச நாணய நிதியம், இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்களை நம்பினால் மாத்திரமே கடன்களை வழங்கும்.
எனினும், தனியார் கடனாளிகளின் கடுமையான நிலைப்பாடு கொழும்புக்கு மோசமான நிலையையே விளைவிக்கும் என்று 182 பொருளாதார வல்லுநர்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.