அவதானம்-ஆபத்தான கெட்ட கொலஸ்ட்ரால் .

பெரும்பாலும் நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாத காரணத்தால் இதனை ஒரு சைலன்ட் கில்லர் என கூறுகின்றார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 18 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதய நோய்களால் பாதிக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய், சுவாச நோய் மற்றும் நீரிழிவு நோய்களால் பாதிக்கப்படுவதை காட்டிலும் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களே அதிகம் என்றும் மருத்துவ ஆய்வில் கூறப்படுகின்றது.

பொதுவாக கொலஸ்ட்ரால் என்பது ஒருவிதமான மெழுகு போன்ற தன்மையுடன் இருக்கும். இது நமது உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஒன்று தான். ஆனால் நமது உடலில் கொலஸ்டராலின் அளவு சரியான அளவில் இருக்க வேண்டும், அளவிற்கு மீறினால் இது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

அதிகளவு கொலஸ்ட்ரால் இருப்பது மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்துவதற்கு அதிகளவு வாய்ப்புகள் உள்ளது.

எல்லா கொலஸ்ட்ராலும் உடலுக்கு தீங்கை விளைவிக்காது, ஹெச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் உங்கள் உடலுக்கு நன்மையை அளிக்கும்.புகைபிடித்தல், நீரிழிவு மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆகியவையும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பிற்கு காரணமாகும்.

பெரும்பாலும் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது.

கொலஸ்ட்ரால் இரத்தத்தில் உள்ள மற்ற பொருட்களுடன் இணைந்து, இதயத் தமனிகளின் உட்புறத்தில் ‘பிளேக்’ எனப்படும் நிலையை உருவாக்குகின்றது.இது இதயத்தின் தசைகளுக்கு தேவையான ஒக்சிஜனை தடுத்து மாரடைப்பை ஏற்படுத்திவிடுகின்றது.

மேலும் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் இதுபோன்ற பிளேக்குகள் ஏற்படுவது மூளைக்கு செல்லும் ஆக்சிஜனை தடுக்கும், இதனால் உடனடியாக பக்கவாதம் ஏற்படும் என்றும் சொல்லப்படுகின்றது.

வியர்வை, மார்பு வலி, எடை அதிகரிப்பு, பிடிப்புகள் அல்லது வலிப்பு மற்றும் தோல் மஞ்சள் நிறமாக இருப்பது போன்றவையும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.