ரஷியாவின் போர் நிறுத்த அழைப்பை நிராகரித்தது உக்ரைன்.

உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்குதலை தொடங்கியது. போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டை நெருங்கி விட்டது. ஆனாலும் இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகள் செய்து வருவதால் உக்ரைன் வீரர்களும் ரஷியாவை எதிர்த்து சளைக்காமல் போராடி வருகின்றனர்.

இந்தநிலையில் உக்ரைனில் ஆர்த்கோடக்ஸ் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 36 மணி நேர போர்நிறுத்தத்தை ரஷிய அதிபர் புதின் அறிவித்து உள்ளார். உக்ரைன் மக்கள் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்துமஸ் சிறப்பாக கொண்டாடுவதற்கு வசதியாக இன்று நண்பகல் முதல் நாளை நள்ளிரவு வரை 36 மணி நேரம் போர் நிறுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக ரஷிய வீரர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கபட்டு உள்ளது. போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக போர் நிறுத்த அறிவிப்பை ரஷியா வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது என உக்ரைன் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ போடாலியா கூறியதாவது. உக்ரைனில் ரஷியா பிடித்து உள்ள பகுதிகளை விட்டு முதலில் வெளியேற வேண்டும்.

அப்போது தான் அது தற்காலிக போர் நிறுத்தமாக இருக்கும். போர் முடிவு பிரகடனம் ரஷியாவின் தந்திரமாகும். போரை முடிவுக்கு கொண்டு வருவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. ரஷியாவின் சூழ்ச்சி முயற்சிக்கு பதில் அளிக்க வேண்டியது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்