உயரங்களின் மீது கனவுகளை ஒட்டத் தெரிந்தவன் வெல்கிறான் பள்ளத்தாக்குகளில் கனவுகளை வைத்திருப்பவன் தோற்கிறான்.

- சாம் பிரதீபன் -


தை பிறந்ததால்
அறம் பாடக் கூடாது என்றிருக்கிறேன்.
அழுது கண்ணீர் வேண்டாம் என்றிருக்கிறேன்.
காய்ந்த புண்களை தோலுரிக்க வேண்டாமே எனப் பார்க்கிறேன்
அழிவுகள் குறித்து கர்ச்சிப்பதை நிறுத்த யோசிக்கிறேன்
அரசியல் சாத்தான்கள் குறித்து துளிகூடப் பேசாதிருக்க விரும்புகிறேன்
அரை நிர்வாணக் கோமாளிகள் பற்றி
சத்தம் செய்யாதிருக்கவும்
முதல் தேரோட்டி முதல் பேயோட்டி என
முதன் முதலில் வெடி சுடுவோரை
சங்கடம் செய்யாதிருக்கவும் ஆசிக்கிறேன்.
ஆதலால் இங்கு பலர்
தப்பிப் போகட்டும் விட்டுவிடுவோம்
ஆதலால் இங்கு பலர் மூச்சு விடட்டும் விட்டுவிடுவோம்

மார்க்சியம் தலித்தியம் பொரியாரிசம் பெமினிசம் எல்லாம்
கொஞ்சம் தள்ளி வைக்கப் பார்க்கிறேன்
அரசியல் அறிவியல் சித்தார்ந்தப் பேரியல்
போரியல் உளவியல் பாட்டியல் பதவியல் யாவும்
கொஞ்சம் மூடிவைக்கப் பார்க்கிறேன்
ஆதலால் இங்கு பலர்
தப்பிப் போகட்டும் விட்டுவிடுவோம்
ஆதலால் இங்கு பலர் மூச்சு விடட்டும் விட்டுவிடுவோம்

பலுக்கு குலுக்கு குமுகாயம் பிரட்டு
குயில்ப் பாட்டு மயில் பாட்டு காஞ்சோண்டி இலைப்பாட்டு
எல்லாம் நிறுத்திவைக்கப் பார்க்கிறேன்
இன்ஸ்ரா ருவிற்றா ரிக்ரொக் மூஞ்சி நூல்
யாவும் முழுதாய் மூடிவைக்கப் பார்க்கிறேன்
ஆதலால் இங்கு பலர்
தப்பிப் போகட்டும் விட்டுவிடுவோம்
ஆதலால் இங்கு பலர் மூச்சு விடட்டும் விட்டுவிடுவோம்

இன்னும் கனவுகளோடு….

இன்னமும் பிறக்காத குழந்தை ஒன்றின்
பெருங் கனவுகள் தெரிந்தவன் நான்
இப்போது இந்த நிமிடம் மடிந்து போன பிணம் ஒன்றின்
கனத்த கனவுகளும் புரிந்தவன்; நான்.
வந்தது முதல் போவது வரை
கனவுகளை மாத்திரம்
சுமந்தலையும் ஒரு இனத்தின் கடைசிக் குழந்தை நான்
ஆதவால்
உங்களிடம் சொல்கிறேன்
கனவுகள் குறித்து கவனமாயிருங்கள்!

இங்கு எங்களில் பலருக்கு
கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் வேறுபாடு தெரியவில்லை.
இங்கு எங்களில் பலருக்கு
கனவுகள் காண்பதிலும் கனவுலகில் வாழ்வதற்கும் இடைவெளி தெரியவில்லை.
ஆதவால்
உங்களிடம் சொல்கிறேன்
கனவுகள் குறித்து கவனமாயிருங்கள்!

இன்னும் கனவுகளோடு….

கனவுகள் என்பது என்ன?
ஆசைகளா?
பேராசைகளின் கோட்டையா?
முடிக்க முடியாதவற்றின் காட்சித் திரையா?
அடைய இயலாததொன்றின் மாயத் தோற்றமா?

கனவுகள் என்பது என்ன?
சாதிக்கத் தவறியவனின் சங்கடத் தெருக்கோடியா?
தோற்றுப் போனவன் தூக்கும் போதைவஸ்தா?
ஏமாற்றங்களைக் கூட்டிச் சேர்த்த குப்பைக் கூடையா?
அழுது முடித்தவன் காணும் அமைதிப் புறாவா?
இன்னும் கனவுகளோடு….
இன்னும் இந்தக் கனவுகளோடு நீற்கள் இருந்தால்
உங்களிடம் சொல்கிறேன்
உங்கள் கனவுகள் குறித்து கவனமாயிருங்கள்!

இங்கு எங்களில் பலருக்கு
கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் வேறுபாடு தெரியவில்லை.
இங்கு எங்களில் பலருக்கு
கனவுகள் காண்பதிலும் கனவுலகில் வாழ்வதற்கும் இடைவெளி தெரியவில்லை.
ஆதவால்
உங்களிடம் சொல்கிறேன்
கனவுகள் குறித்து கவனமாயிருங்கள்!

மனிதனிடம்
தீர்ந்து போகாமல் இருப்பது
கனவுகள் மாத்திரமே!

உங்களுக்கு ஒன்று தெரியுமா?
குழந்தைகள் ஒருபோதும்
கடந்த காலத்தை கனவு காண்பதில்லை.
நாங்கள் எப்போதும்
கடந்த காலத்தை கனவு காணாமல் இருந்ததில்லை.
ஆதவால்
உங்களிடம் சொல்கிறேன்
கனவுகள் குறித்து கவனமாயிருங்கள்!

இன்னும் கனவுகளோடு இருக்கும் மனிதர்களுள்
நானும் ஒருவன்.
நான் வெளியே சொல்லிக்கொள்ளாமல்
மிக நிதானமாய் கனவு காணத் தெரிந்தவன்.
எனக்கு எப்போதும்
ஒரு கனவு இருந்துகொண்டேயிருக்கிறது.
ஒரே கனவு ஒருபோதும் இருந்ததே இல்லை.

ஐந்து வயதில் ஒரு கனவிருந்ததைப் போலவே
இன்றும் ஒரு கனவிருக்கிறது.
அப்போது ஒரு மிட்டாயைப் பற்றிக்கொள்ளும் கனவு
இப்போது ஒரு மிடுக்கோடு வாழ்ந்து முடியும் கனவு
ஒற்றைக் கனவோடு
ஒரு ஆயுளை முடித்துக்கொள்ளப் பிறந்தவனல்ல நான்
நாளும் ஒரு கனவு
அதை அடையும் விரைவு
ஆங்காங்கே உடைவு
உடைவின் மேலே மற்றொரு கனவு
ஒரு கனவின் மீதேறி
அடுத்த கனவைத் தாண்டத் தெரிந்தவன் நான்.
என் கனவுகளை உயரங்களின் மீதே
ஒட்டி வைத்தபடியிருக்கிறேன்
ஆதலால் நான் கனவுகளின் பிதாமகன்
ஆதலால் நான்
கனவுகளின் கோடீஸ்வரன்

கனவுகள் குறித்த சூத்திரம் ஒன்று சொல்லட்டுமா?
உயரங்களின் மீது
கனவுகளை ஒட்டத் தெரிந்தவன் வெல்கிறான்
பள்ளத்தாக்குகளில்
கனவுகளை வைத்திருப்பவன் தோற்கிறான்.
ஆதவால்
உங்களிடம் சொல்கிறேன்
கனவுகள் குறித்து கவனமாயிருங்கள்!

எட்டு வயதில் மிட்டாய் கனவு – தப்பில்லை
பத்து வயதில் மீசை கனவு – தவறில்லை
அடுத்த பருவம் காதல் கனவு – பிழையில்லை
இன்னும் போனால் கல்வி கனவு
அதையும் தாண்டி வேலைக் கனவு
பின்னர் தான் அந்த
ஆசைக் கனவு
காசுக் கனவு
ஆணவக் கனவு
அந்தக் கனவு
இந்தக் கனவு
அடுக்கி அடுக்கி பெரும் பந்தாக் கனவு

கனவுகள் என்பது
முடிக்க முடியாதவற்றின் காட்சித் திரையா?
முடிக்க வேண்டியதன் நீண்ட தரை
கனவுகள் என்பது
அடைய இயலாததொன்றின் மாயத் தோற்றமா?
அடைய வேண்டியதொன்றின் தூய தேற்றம்

கனவுகள் என்பது
சாதிக்கத் தவறியவனின் சங்கடத் தெருக்கோடியா?
நிகழ்த்த வேண்டிய சாதனை ஒன்றின் வங்காள விரிகுடா
தோற்றுப் போனவன் தூக்கும் போதைவஸ்தா?
தோற்காதபடி நகர்த்தும் நெம்புகோல்
ஏமாற்றங்களைக் கூட்டிச் சேர்த்த குப்பைக் கூடையா?
அடுத்தது என்ன எனச் சொல்லும் நட்சத்திரக் கூட்டம்
அழுது முடித்தவன் காணும் அமைதிப் புறாவா?
அவமானங்களை தாண்டக் கிடைத்த படகுத் துடுப்பு
ஆதலால்
உங்களிடம் சொல்கிறேன்
உங்கள் கனவுகள் குறித்து கவனமாயிருங்கள்!

இங்கு எங்களில் பலருக்கு
கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் வேறுபாடு தெரியவில்லை.
இங்கு எங்களில் பலருக்கு
கனவுகள் காண்பதிலும் கனவுலகில் வாழ்வதற்கும் இடைவெளி தெரியவில்லை.
ஆதவால்
உங்களிடம் சொல்கிறேன்
கனவுகள் குறித்து கவனமாயிருங்கள்!

தை பிறந்ததால்
அறம் பாடக் கூடாது என்றிருக்கிறேன்.
அழுது கண்ணீர் வேண்டாம் என்றிருக்கிறேன்.
காய்ந்த புண்களை தோலுரிக்க வேண்டாமே எனப் பார்க்கிறேன்
அழிவுகள் குறித்து கர்ச்சிப்பதை நிறுத்த யோசிக்கிறேன்
அரசியல் சாத்தான்கள் குறித்து துளிகூடப் பேசாதிருக்க விரும்புகிறேன்
அரை நிர்வாணக் கோமாளிகள் பற்றி
சத்தம் செய்யாதிருக்கவும்
முதல் தேரோட்டி முதல் பேயோட்டி என
முதன் முதலில் வெடி சுடுவோரை
சங்கடம் செய்யாதிருக்கவும் ஆசிக்கிறேன்.
ஆதலால் இங்கு பலர்
தப்பிப் போகட்டும் விட்டுவிடுவோம்
ஆதலால் இங்கு பலர் மூச்சு விடட்டும் விட்டுவிடுவோம்