மின் கட்டண திருத்தம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது!
புதிய மின் கட்டண திருத்தம் இன்று (திங்கட்கிழமை) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மின்சார செலவை கருத்தில் கொண்டு, தொடர்ந்தும் மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் தற்போதுள்ள மின் கட்டணங்கள் திருத்தப்பட வேண்டும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதற்கமைய, கடந்த ஓகஸ்ட் மாதம் 75 வீதத்தால் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணம் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மீண்டும் அதிகரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
புதிய திருத்தங்களுக்கு அமைய 0 முதல் 60 வரையான அலகுகளுக்கான கட்டணத்தின் கீழ், அலகொன்றிற்கான கட்டணம் உள்ளிட்ட நிலையான கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய 0 முதல் 30 வரையில் அலகொன்றுக்கான 8 ரூபாய் என்ற கட்டணத்தை 30 ரூபாவாகவும், 120 ரூபாய் என்ற நிலையான கட்டணத்தை 400 ரூபாயாகவும் அதிகரிக்கப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
31 முதல் 60 வரையில் அலகொன்றுக்கான 10 ரூபாய் என்ற கட்டணத்தை 37 ரூபாயாகவும், 240 ரூபாயாவாக காணப்பட்ட நிலையான கட்டணத்தை 550 ரூபாயாவரையிலும் அதிகரிப்பதற்கு புதிய யோசனையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
61 முதல் 90 வரையான அலகொன்றுக்கு 16 ரூபாயாவாக காணப்பட்ட கட்டணம் 42 ரூபாயாவாகவும், 360 ரூபாவாக இருந்த நிலையான கட்டணம் 650 ரூபாய் வரையிலும் அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சரவையினால் முன்வைக்கப்படும் எந்தவொரு யோசனையையும் பரிசீலிக்க போவதில்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.