வெற்றுக் காணிகளை வைத்திருக்கும் புலம்பெயர் தேசத்து உரிமையாளர்கள் பயிர்ச்செய்கைக்கு காணிகளை வழங்க முன்வரவேண்டும்: பொ. ஐங்கரநேசன் தெரிவிப்பு
சீனா மனிதாபிமான நோக்கில் அரிசியை வழங்கியிருந்தால் எங்களது பயன்பாட்டிலுள்ள அரிசியைத் தெரிவு செய்து வழங்கியிருக்கும். ஆனால், இந்தச் சீன அரிசியில் மனிதாபிமானம் இல்லை,வல்லாதிக்கப் போட்டி அரசியலே அதிகமாகவுள்ளது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி உடனடியாகத் தீரப்போவதில்லை. இதனாலேயே அரசாங்கம் பயன்படுத்தாமலுள்ள காணிகளை எடுத்து இராணுவத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளது. இது உணவு உற்பத்தி என்ற பெயரில் காணிகளை கையகப்படுத்தும் மறைமுக நோக்கத்தையும் கொண்டுள்ளது. வடக்குக் கிழக்கில் உள்ள வெற்றுக் காணிகளில் எமது பொது அமைப்புகள் அல்லது தன்னார்வலர்கள் உணவு உற்பத்தியில் ஈடுபட முன்வரவேண்டும்.
பல வெற்றுக் காணிகளின் உரிமையாளர்கள் புலம்பெயர்ந்து வாழுகிறார்கள். குத்தகை அடிப்படையிலேனும் பயிர்ச்செய்கைக்கு காணிகளை வழங்க அவர்கள் முன்வரவேண்டும். கிழக்கு மாகாணத்தில் பசியால் ஒரு சிறுவன் இறந்ததாகப் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இது ஒட்டுமொத்த ஈழத்தமிழ்ச் சமூகத்துக்குமே இழுக்காகும்.
போர்க்காலத்தில் பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டிருந்தபோதுகூட பட்டினியால் எவரும் இறந்ததில்லை. பிரதேச செயலகங்களில் கிராம சேவையாளர் பிரிவுரீதியாகப் பட்டினியை எதிர்நோக்கியுள்ள வறிய குடும்பங்களின் விபரங்கள் உள்ளன. திருவிழாக் காலங்களில் மட்டுமே அன்னதானங்கள் என்று இல்லாமல் இக்குடும்பங்களின் சிலநாள் பசியையேனும் போக்க எமது ஆலயங்களும் முன்வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.