மலச்சிக்கலை தவிர்க்ககூடிய வழிமுறைகள்.

தினமும் அதிகாலை எழும்போது மலம் கழிக்கும் உணர்வு ஒருவரை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்தால், அவர் ஆரோக்கியமாக வாழ்கிறார் என்று தாராளமாகக் கூறலாம்.கல்போல கடினமான மலம், முழுமையாக மலம் வெளியேறாமல் துன்பப்படுவது, வயிற்றுவலி, வயிறு ஊப்புதல், வாயு பிரிதல்… என மலச்சிக்கல் உண்டாக்கும் அறிகுறிகளே கடுமையான அசௌகரியங்களைக்  கொடுப்பவை.

டீ குடித்தால் தான்… சிகரெட் பிடித்தால்தான்… மாத்திரைகள் விழுங்கினால்தான் மலம் வெளியேறும்’ என்று சாக்குப் போக்கு சொல்பவர்கள் உடனடியாகப் பழக்கத்தை மாற்றிக்கொள்வது நல்லது.

மலச்சிக்கலுக்கான அடிப்படைக்காரணங்கள் என்ன?

-மாப்பொருள் சேர்த்த உணவுகள், நிச்சயம் மலச்சிக்கலை உண்டாக்கும்.
-ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்: பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், நார்ச்சத்து இல்லாத       கொழுப்பு உணவுகள், துரித உணவுகள் இவையெல்லாம் நமக்கு மலச்சிக்கல் போன்ற   பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.
-தேவையான அளவு தண்ணீர் பருகாதது போன்றவை மலச்சிக்கலை உண்டாக்கும்.
-உடல் பியற்சி இல்லாதவர்கள், அதிகமாக தேநீர், கோப்பி அருந்துபவர்கள், தூக்கமின்மையால்   அவதிப்படுபவர்கள், மலத்தை அடக்குபவர்கள் போன்றவர்களுக்கு மலம் கழிப்பதில் சிரமம்   ஏற்படும்.
– மேலைநாட்டுக் கழிப்பறையைப் (commode toilet) பயன்படுத்துபவர்களுக்கு மலச்சிக்கல்     தொந்தரவு அதிக அளவில் இருக்கும்.

மலச்சிக்கலை எப்படி தவிர்க்கலாம்.

நிறைய தண்ணீர் குடிப்பது மலச்சிக்கலுக்கான முதல் மருந்து.மலச்சிக்கலை சரிசெய்வதில் வெந்தயம் சிறந்த பங்களிப்பைத் தரக்கூடியது. நீரில் ஊறவைத்த வெந்தயம், சிறிது நேரத்தில் கொழகொழப்புத் தன்மையை அடையும். அதைப் பயன்படுத்தும்போது, மலச்சிக்கலை நிவர்த்தி செய்யும்; உடலுக்குத் தேவையான நுண் ஊட்டச்சத்துகளையும் கிடைக்கச் செய்யும். நூறு கிராம் வெந்தயத்தில் அறுபத்தைந்து சதவிகிதம் நார்ச்சத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. செரிமானத்தை சிறப்பாக்கக்கூடிய சீரகம், சுக்கு, மிளகு, ஏலம் போன்றவற்றை உணவு வகைகளில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.உணவியல் மற்றும் வாழ்வியல் மாற்றம் மூலம் சரிசெய்ய முடியாதபோது மருந்துகளுக்குச் செல்லலாம். மருந்துகளின் மூலம் இயல்பான மலம் வெளியானவுடன், மருந்துகளை நிறுத்திவிடுவது நல்லது. நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை கவனிக்காமல் விட்டால், குடல் சார்ந்த பிரச்சனையாக மாறி விடும்.மலச்சிக்கல் என்பது தீர்க்க முடியாத நோயல்ல. சில மாற்றங்களால் சரி செய்யக்கூடியது.