சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த இராணுவத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.

போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிய தொடர்ந்து போராடிவரும் உறவினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மனித உரிமைகள் சட்டத்தரணிகள் குழு வெற்றி பெற்றுள்ளது.முல்லைத்தீவு இராணுவ முகாமில் பதிமூன்று வருடங்களுக்கு முன்னர் சரணடைந்து கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களில் ஒருவரையாவது இராணுவம் காணாமல் ஆக்கியுள்ளதாக வவுனியா மேல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளமையை சட்டத்தரணிகளினால் வெற்றியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதி நாட்களில் இராணுவத்திடம் சரணடைந்தவர்களைக் கண்டறியுமாறு உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ஆட்கொணர்வு மனுக்கள் டிசம்பர் 16 வெள்ளிக்கிழமை வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் செல்லையா விஸ்வநாதனைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை இராணுவத்தினரிடம் ஒப்படைத்து நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல் தெரிவித்துள்ளார்.

இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரின் மனைவியினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரரின் கணவர் இராணுவத்திடம் சரணடைந்தார். அதன் பின்னர், அவருக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் இராணுவமே பொறுப்புக் கூற வேண்டும் என, மனுதாரருக்கு ஆதரவாக, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.’இராணுவத்திடம் சரணடைந்த செல்லையா விஸ்வநாதனை அடுத்த வருடம் மார்ச் மாதம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு இராணுவத் தளபதி மற்றும் 58ஆவது படைத் தளபதி ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதாக சிரேஷ்ட சட்டத்தரணி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

செல்லையா விஸ்வநாதன் இராணுவத்தின் பிடியில் இருந்தபோதே காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல், நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என வலியுறுத்தியுள்ளார்.