சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு சாத்தியமற்றது: அட்மிரல் சரத் வீரசேகர தெரிவிப்பு.

நாட்டை பிளவுபடுத்தும் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு சாத்தியமற்றது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நாட்டின் ஒருமைப்பாட்டை விட்டுக் கொடுக்க முடியாது. நாட்டை பிளவுபடுத்த பெரும்பான்மையான மக்கள் இணக்கம் தெரிவிக்கமாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தை புறக்கணித்தமை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.நாட்டின் பொருளாதாரம் குறுகிய காலத்தில் திட்டமிட்ட வகையில் பலவீனப்படுத்தப்பட்டதா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது.பொருளாதார பாதிப்பை தொடர்ந்து ஒரு சில புலம்பெயர் அமைப்புக்களின் மீதான தடை நீக்கப்பட்டு தற்போது அதிகார பகிர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகிறது. அதிகார பகிர்வு என்பது சாத்தியமற்றது அதனால் ஜனாதிபதி தலைமையில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை. நாட்டை பிளவுபடுத்தும் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு சாத்தியமற்றது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாட்டின் ஒருமைப்பாட்டை விட்டுக் கொடுக்க முடியாது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் உண்மை நோக்கம் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு கிடையாது.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் பிரச்சினைகளை மாத்திரம் காலம் காலமாக குறிப்பிட்டுக் கொண்டு அதனூடாக தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொண்டு தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்கள். சமஷ்டி அடிப்படையில் நாட்டை பிளவுப்படுத்துவது தமிழ் மக்களின் நோக்கமல்ல ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் கூட்டணி அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பின் கொள்கையும் வேறுபட்டது. ஆகவே கூட்டணி கொள்கை அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும் என்பதில் அவதானமாக உள்ளோம் எனத் தெரிவித்தார்.