5 மொழிகளில் விஜய் படம்.

விஜய் நடித்துள்ள 66-வது படமான ‘வாரிசு’ பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராகி உள்ளதால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் அதிக தியேட்டர்களில் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். ஆனால் அங்கு தெலுங்கு நடிகர்களின் நேரடி படங்களுக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் போர்க்கொடி தூக்கியதால் வாரிசு படத்துக்கு கூடுதல் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

தொடர்ந்து சமரச முயற்சிகள் நடக்கின்றன. அடுத்து விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்கிறார். இது முழுநீள அதிரடி சண்டை படமாக உருவாகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு மீண்டும் அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது. இது விஜய்க்கு 68-வது படம். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் வந்துள்ளன. தற்போது சினிமா துறையில் பான் இந்தியா படங்கள் எழுச்சி பெற்று இருப்பதால் விஜய்யின் 68-வது படத்தையும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.