மக்களை ஏழைகளாக வைத்திருக்கவே பா.ஜ.க விரும்புகின்றது-ராகுல் காந்தி.
மக்களை ஏழைகளாக வைத்திருக்கவே ஆங்கிலம் கற்பதை பா.ஜ.க தடுக்கிறது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு, ஒரே மொழி என்ற கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகின்றது.இது தவிர ஒன்றிய அரசின் அலுவலங்களில் இந்தியை பயன்படுத்த சொல்வது, அலுவல் பூர்வ கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
அதிலும் ஆங்கிலத்தை அழித்து அந்த இடத்தில இந்தியை வைக்க பா.ஜ.க அரசு துடித்து வருகின்றது. இதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழியாக ஆங்கிலத்துக்கு பதில் கட்டாயமாக ஹிந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், நாட்டின் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி மக்களை ஏழைகளாக வைத்திருக்கவே ஆங்கிலம் கற்பதை பா.ஜ.க தடுக்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பாரத் ஜோடோ யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இது குறித்து தெரிவிக்கையில்,
‘உலகின் பிற மக்களுடன் நீங்கள் பேச விரும்பினால், இந்தி வேலை செய்யாது, ஆங்கிலம்தான் வேலை செய்யும். ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் அமெரிக்கர்களுடன் போட்டியிட்டு அவர்களின் மொழியைப் பயன்படுத்தி அவர்களை வெல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.
பாஜக தலைவர்கள் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிப்பதை விரும்பவில்லை. ஆனால், அவர்களின் தலைவர்களின் குழந்தைகள் ஆங்கில வழி பள்ளிகளுக்கு செல்கிறார்கள். உண்மையில் அவர்கள் ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் விரும்பவில்லை. ஆங்கிலம் கற்று, பெரிய கனவு காணுங்கள் ‘ என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.