பிரதமர் மோடி- சுந்தர் பிச்சை சந்திப்பு!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று டெல்லியில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது புதுமை, தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
மனித சமுதாய முன்னேற்றம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு உலகம் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவது முக்கியம் என இந்த சந்திப்பு குறித்து பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேபோல, பிரதமர் மோடியை சந்தித்த பிறகு பிரதமருக்கு நன்றி தெரிவித்து சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவின் தொழில்நுட்ப மாற்றம் மிக வேகமாக வளர்ந்து வருவதாக தெரிவித்தார்.
வருங்காலத்தில் இந்தியாவுடன் தொழில்நுட்ப ரீதியிலான நல்லுறவை எதிர்நோக்குவதாகவும் ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்றதற்கு முழு ஆதரவை அளிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.