சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா-லட்சக்கணக்கானோர் உயிரிழக்க நேரிடும்
சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினமும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 90 நாட்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படக்கூடும். லட்சக்கணக்கானோர் உயிரிழக்க கூடிய வாய்ப்பு உள்ளதாக தொற்று நோயியல் நிபுணர் எரிக் பீகல் டிங் தெரிவித்துள்ளார்.
சீனாவில் கொரோனா அதிகரித்து வருவதால் எந்த நேரத்திலும் மற்ற நாடுகளுக்கு பரவலாம் என அஞ்சப்படுகிறது. சீனாவின் இந்த பாதிப்பு வைரசின் புதிய பிறழ்வுகளை உருவாக்கலாம் என்றும், இது உலகையே கவலை அடைய செய்திருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஏனெனில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க போராடி வருகிறது.
எந்த நேரத்திலும் வைரஸ் வேகமாக பரவலாம். வைரசின் பிறழ்வு எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் திறன் கொண்டது என்பதை நாங்கள் அறிவோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்தார். பிரைஸின் கருத்து பற்றி வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டதற்கு, அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.