உக்ரைன் ராணுவ தாக்குதலில் டொனெட்ஸ்க் மாகாணத்தில் 5 ஆயிரம் பேர் பலி.
உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா போரை தொடங்கியது. உக்ரைன் நகரங்களை ரஷிய படைகள் சின்னாபின்னமாக்கி வரும் அதே வேளையில் மேற்கத்திய நாடுகள் வழங்கிய அதிநவீன ஆயுதங்களை கொண்டு ரஷியாவுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது.
அந்த வகையில் உக்ரைனில் ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் டான்பாஸ் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த பிராந்தியத்தில் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய இரு மாகாணங்கள் உள்ளன. இந்த நிலையில் போர் தொடங்கியதில் இருந்து இப்போது வரை டொனெட்ஸ்க் மாகாணத்தில் உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் அப்பாவி மக்கள் சுமார் 5 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக மாகாண தலைமை குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக உக்ரைனின் போர்க்குற்றங்கள் தொடர்பான கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்திடம் மாகாண நிர்வாகம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அதில், “கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி முதல் உக்ரைன் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 132 சிறுவர்கள் உள்பட 4,392 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 3,926 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.