அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் வாழ்த்து.

சென்னை ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றார். உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனைத்தொடர்ந்து, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தனது அறையில் இளைஞர் நலத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

தமிழக அமைச்சரவையில், அமைச்சர் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுபோன்று, வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி ஸ்டாலின். அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது என மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.