13ம் தேதி உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி!

வரும் 13-ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

வங்க கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் வரும் 13-ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் மேலடுக்கு சுழற்சி தீவிரமடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது.

இதனிடையே, நேற்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, 9 கிமீ வேகத்தில் வேலூருக்கு 30 கிமீ தொலைவில் நகர்கிறது. கிருஷ்ணகிரிக்கு கிழக்கு வடகிழக்கில் 120 கிமீ தூரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது.

அடுத்த 12 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. தற்போது நிலவும் வானிலை மாற்றத்தால் நாளை வடதமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. டிசம்பர்.11-ஆம் தேதி வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கனமழையும், அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.