உக்ரைனில் நடந்து வரும் போா் நேட்டோவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான மிகப்பெரிய போராக உருவெடுக்கக் கூடிய அபாயம் உள்ளது .
அமெரிக்கா, கனடா மற்றும் 28 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ராணுவ கூட்டமைப்பு நேட்டோ. உலகின் மிகவும் வலிமையான ராணுவ கூட்டமைப்பாக அறியப்படும் இந்த அமைப்பில் இணைவதற்கு கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் விருப்பம் தெரிவித்தது.
நேட்டோவும் இதற்கு சம்மதம் தெரிவித்தது. இந்த சூழலில் உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த அதன் அண்டை நாடான ரஷியா உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இன்னும் சில தினங்களில் இந்த போர் 11-வது மாதத்தை எட்டவுள்ளது. ரஷியா குற்றச்சாட்டு இந்த போரில் நேட்டோ உறுப்பு நாடுகள் நேரடியாக பங்கேற்கவில்லை என்றாலும் உக்ரைனுக்கு தேவையான ராணுவ மற்றும் நிதியுதவிகளை வழங்கி பக்கபலமாக இருந்து வருகின்றன.
ஆனால் ரஷியாவோ உக்ரைன் போரில் அமெரிக்காவும் பிற நேட்டோ நாடுகளும் நேரடியாகப் பங்கேற்பதாக குற்றம் சாட்டி வருகிறது. ரஷியாவுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை அனுப்புவது, உக்ரைன் வீரா்களுக்கு தங்கள் நாடுகளில் போா்ப் பயிற்சியளிப்பது, ரஷிய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக உக்ரைன் ராணுவத்துக்கு உளவுத் தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் போரில் மேற்கத்திய நாடுகள் நேரடியாக பங்கேற்பதாக ரஷியா கூறுகிறது.
எனவே உக்ரைனில் நேட்டோ தளவாடங்கள் மற்றும் அந்த அமைப்பின் அதிகாரிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த தங்களுக்கு சட்டபூா்வ உரிமை உள்ளது என்றும் ரஷியா எச்சரித்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் நடந்து வரும் போா், தங்களது அமைப்புக்கும் ரஷியாவுக்கும் இடையிலான போராக உருவெடுப்பதற்கான அபாயம் உள்ளதாக நேட்டோ அமைப்பின் பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் எச்சரித்துள்ளாா்.
நார்வே நாட்டின் முன்னாள் பிரதமரான ஜென்ஸ் அந்த நாட்டின் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது இதுகுறித்து கூறியதாவது:- மிகப்பெரிய போராக உருவெடுக்கும் உக்ரைனில் நடந்து வரும் போா் மிகவும் அபாயகரமானது. அதில் ஒரு சிறு தவறு நேர்ந்தால் கூட நேட்டோவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான மிகப்பெரிய போராக உருவெடுக்கக் கூடிய அபாயம் உள்ளது. அதனைத் தவிா்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டு வருகிறோம்.
தற்போது உக்ரைனில் மட்டும் நடைபெற்று வரும் சண்டை, ஐரோப்பாவின் மற்ற நாடுகளுக்கும் பரவி, முழு போராக உருவெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். அதே வேளையில் அதனைத் தடுப்பதற்கான எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் யாரும் அலட்சியப்படுத்திவிடக் கூடாது. இவ்வாறு ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் கூறினார்.