இந்த நாட்டின் கலாசாரத்தை சீரழிக்க அரசியல்வாதிகளுக்கு இடமளிக்க முடியாது-பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை,

அரசியல்வாதிகள் தமது அதிகாரங்களையும் பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்நாட்டை பயன்படுத்திக் கொள்வதற்கு இடமளிக்க முடியாது என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் கல்வி கற்று வந்த அரசியல்வாதிகளால் நாட்டின் கலாசாரம் சீரழிக்கப்படுவதற்கு மகா சங்கத்தினர் அனுமதித்து விடக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.

கம்பஹா – குருண புனித பீட்டர் வித்தியாலயத்தில் புதிய கட்டடமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

உயர்மட்டத்திலுள்ளவர்கள் முதல் அடிமட்டத்திலுள்ளவர்கள் என அனைவரும் இன்று மோசடிகளுக்கு அடிமையாகியுள்ளனர்.

இதன் காரணமாக 74 வருடங்களுக்குள் உண்மைகளை பொய்யாகவும் , பொய்களை உண்மைகயாகவும் மாற்றுவதற்காக போக்கின் காரணமாகவே நாடு இன்று இந்த நிலைமையை அடைந்துள்ளது. ஒருபுறம் போதைப்பொருளை உபயோகிப்பவர்களுக்கும் , அவற்றை தம்வசம் வைத்திருப்பவர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்படுகிறது.

ஆனால் மறுபுறம் கஞ்சா பயிர்செய்கையை ஊக்குவிப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் கல்வி கற்றவர்கள் இலங்கைக்கு வந்து கசினோக்களையும் , இரவு நேர தொழில்களையும் ஊக்குவிக்குமாறு கூறுகின்றனர்.

எமது நாட்டின் நாகரீகம் எங்கே? பௌத்த போதனைகளால் ஒழுக்கம் மிக்க சமூகத்தினர் தோற்றம் பெற்ற இந்த நாட்டின் கலாசாரத்தை சீரழிக்க அரசியல்வாதிகளுக்கு இடமளிக்க முடியாது. இதுபோன்ற முட்டாள் தனமான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்று மகா சங்கத்தினரிடம் கேட்டுக் கொள்கின்றோம் என அவர் குறிப்பிட்டார்.

முழு நாட்டையும் விற்றேனும் உண்டு வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இவர்கள் காணப்படுகின்றனர். ஒவ்வொரு வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் ஒவ்வொரு பகுதிகளையும் வழங்குவதாகக் குறிப்பிடுகின்றனர்.

இவற்றின் மூலம் எவ்வாறு நாட்டைக் கட்டியெழுப்புவது? அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்கும் , பதவிகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் இந்த நாட்டை உபயோகித்துக் கொள்ள வேண்டாம்.

சர்வதேச நாணய நிதியமும் , உலக வங்கியும் கூறுகின்றது என்பதற்காக நாட்டுக்கு பொறுத்தமற்ற சட்டங்களை நடைமுறைப்படுத்துவது கையேந்தும் செயற்பாட்டைப் போன்றதல்லவா? நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முழுமையான அறிவு பூர்வமாக புரட்சியே அத்தியாவசியமானதாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.