டிசம்பர் 10 ஆம் திகதி பாரிய அளவிலான பேரணி:போராட்டத்திற்கு வடகிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் அழைப்பு
நாளை டிசம்பர் 10 ஆம் திகதிசனிக்கிழமை சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் வடக்கு மாகாணத்தில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களும் சேர்ந்து வவுனியாவிலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களும் சேர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திலும் பாரிய அளவிலான பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களிற்கான இழப்பீடு பற்றி இலங்கை அரசு பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில் மீண்டும் போராட்டத்திற்கு வடகிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் அழைப்புவிடுத்துள்ளன.அவ்வகையில் வவுனியாவில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.மனித உரிமைகள் தினமான வருகின்ற 10ம் திகதி வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணியினை முன்னெடுக்கவுள்ளதாக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வடக்கின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக வவுனியா கந்தசுவாமி கோவிலில் பேரணி ஆரம்பிக்கப்பட்டு பஜார் வீதியினூடாக பழையபேருந்து நிலையத்தில் முடிவடையவுள்ளது.கிழக்கு மாகாணத்திற்கான பேரணியானது கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஆரம்பிக்கப்பட்டு காந்தி பூங்காவிலே முடிவடையவுள்ளது.
மதகுருமார்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பல்கலைகழக மாணவர்கள், இளைஞர்கள் – யுவதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தினர், வர்த்தக சங்கத்தினர் , பொதுமக்கள் மற்றும் தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சியினர் என எல்லோரையும் இந்தப் பேரணியில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.