பலாலி விமான சேவைகள் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பம்.
பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிசார் விமான சேவைகள் அதிகார சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு வாரத்திற்கு நான்கு விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிசார் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து புறப்படும் விமானம் காலை 10.50 மணிக்கு பலாலி விமான நிலையத்தை வந்தடைவதற்கும் பலாலி விமான நிலையத்திலிருந்து நண்பகல் 11.50 மணிக்கு மீண்டும் சென்னை நோக்கிய விமான பயணத்தை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பலாலி சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்
இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக பலாலி சர்வதேச விமான நிலையம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
எனினும், கொரோனா தொற்று காரணமாக, அதன் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தன.
அத்துடன், சில இந்திய விமான நிறுவனங்கள் மீண்டும் சேவைகளை முன்னெடுக்க தயாரான போதிலும் சில தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் அதற்கு சவாலாக அமைந்திருந்ததாக அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.