கொழும்பில் நடைபெறும் சிறுநீரக மோசடி – பிரதான சந்தேகநபர் கைது!
பொரளை பகுதியில் அமைந்து தனியார் வைத்தியசாலையொன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக அறுவை சிகிச்சை மோசடியில் பிரதான முகவராக இருந்த நபர் ஒருவரை கொழும்பு குற்றவியல் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கிராண்ட்பாஸைச் சேர்ந்த 41 வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்ட மேலும் பலரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு குற்றவியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பொரளை பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரகம் மாற்று மோசடி இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் எழுவர் அடங்கிய குழுவொன்று இந்த விசாரணைகளுக்கான நியமிக்கப்பட்டுள்ளது.
அதில் விசேட வைத்தியர்கள் ஐவரும், சட்ட வைத்திய அதிகாரி ஒருவரும் விசாரணை அதிகாரி ஒருவரும் அடங்குகின்றனர்.
குறித்த சம்பவத்தின் போது விதைப்பை மாற்றப்பட்டதாக கூறப்படுகின்ற போதிலும் மருத்துவ ரீதியாகவோ அல்லது பரிசோதனை ரீதியாகவோ அவ்வாறான மாற்று அறுவை சிகிச்சை இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களின் ஊடாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
எனினும் அவ்வாறானதொரு அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கு எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை.
வைத்தியசாலையில் இது குறித்து வினவப்பட்டபோது, அவ்வாறாதொரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.