வடக்கில் மருத்துவர் அடையாளம் பொறிக்கப்பட்ட காரில் கைப்பற்றப்ட்ட உயிர்கொல்லி ஹெரோய்ன்.

யாழ்., தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் மருத்துவர் என்பதைக் குறிக்கும் அடையாளம் பொறிக்கப்பட்ட காரிலிருந்து ஒரு கிராம் 30 மில்லி கிராம் உயிர்கொல்லி ஹெரோய்ன் மீட்கப்பட்டுள்ளது என்று கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சந்தேகத்தில் காரில் பயணித்த 26 மற்றும் 27 வயதான இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.கொடிகாமம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர். இதன்போது, மருத்துவர் என்பதைக் குறிக்கும் அடையாளம் பொறிக்கப்பட்ட காரை மறித்து பொலிஸார் ஆவணங்களைப் பரிசோதித்த போது காரிலிருந்தவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பொலிஸார் அவர்களைச் சோதனையிட்டனர்.

சாரதியிடமிருந்து 600 மில்லிகிராம் உயிர்கொல்லி ஹெரோய்னும், அவருடன் பயணித்தவரிடமிருந்து 430 மில்லிகிராம் உயிர்கொல்லி ஹெரோய்னும் மீட்கப்பட்டது.காரின் சாரதியின் சகோதரர் மருத்துவர் என்று விசாரணைகளில் தெரியவந்தது. இதேவேளை, இவர்களிடமிருந்து தலா 2 கிராம் உயிர்கொல்லி ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸ் தகவல்கள் தெரிவித்த போதும், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அதனை மறுத்தார்.மேலும், வழமையாக இவ்வாறான கைதுகள் இடம்பெற்றால் ஊடகங்களுக்குத் தகவல் வழங்கும் பொலிஸார் மேற்படி சம்பவம் தொடர்பில் எந்தத் தகவலையும் கசியவிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.