சமஸ்டி தீர்வு உட்பட 1987 முதல் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை  நிறைவேற்றும்படி ரோ அமைப்பின் தலைவர் ஜனாதிபதி ரணிலிடம் வேண்டுகோள் .


இலங்கை தமிழ் சிறுபான்மையினருக்கான சமஸ்டி தீர்வு உட்பட 1987 முதல் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் படி இந்தியாவின்  ரோ அமைப்பின் தலைவர் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை கேட்டுக்கொண்டார் தெரிவிக்கப்படுகின்றது.

ரோவின் தலைவர் சமந்குமார் கோல் இலங்கையில் வர்த்தக திட்டங்களின் மூலம் ஆழமாக கால்பதித்துள்ள சீனா தனது திட்டங்களை விஸ்தரிப்பதால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் குறித்தும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன்  பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

மேற்குலகமும் இந்தியாவும் சீனாவிற்கு இராணுவநிகழ்ச்சி நிரல் உள்ளதாக சந்தேகம் கொண்டுள்ளன எனினும் சீனா இதனை முழுமையாக நிராகரித்து வருகின்றது.இந்திய பிரதமரை சந்திப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் மேற்கொண்ட மறைமுக முயற்சிகளின் மத்தியிலேயே இந்தியாவின் ரோவின் தலைவரின் விஜயம் இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோவின் தலைவர் சில வர்த்தக பரிமாற்றங்கள் உட்பட எஞ்சியுள்ள சில விடயங்கள் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். இலங்கையின் வடக்குகிழக்கில் சீனாவின் அதிகரித்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் கரிசனை வெளியிட்டார் என இந்த சந்திப்பு குறித்து விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 13வது திருத்தம் உட்பட இலங்கை அளித்த வாக்குறுதிகள் குறித்து அவர் கேள்வி எழுப்பினார் என மற்றுமொரு அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது.ரோவின் தலைவர் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவையும் சந்தித்தார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சந்திப்பின்போது அடுத்த தேர்தல் தொடர்பான செய்தி தெரிவிக்கப்பட்டிருக்கலாம் என பசில் ராஜபக்சவிற்கு நெருக்கமான வட்டாரமொன்று தெரிவித்துள்ளது. ரோவின் தலைவரின் விஜயம் குறித்து இந்திய தூதரகத்திடம் கருத்து பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை.