FIFA-ஸ்பெயின் ஜெர்மனி ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் 8-வது நாள் நள்ளிரவில் அல் பேத் ஸ்டேடியத்தில் நடந்த ‘இ’ பிரிவு ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஸ்பெயின், 11-வது இடத்தில் உள்ள ஜெர்மனியுடன் பலப்பரீட்சை நடத்தின.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணி தொடக்கம் முதலே தாக்குதல் பாணியை தொடுத்து ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியினரின் கட்டுப்பாட்டில் தான் பந்து அதிக நேரம் (65 சதவீதம்) வலம் வந்தது. 6-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டேனி ஒல்மா கோல் வலையை நோக்கி வேகமாக அடித்த ஷாட்டை ஜெர்மனி கோல்கீப்பர் மானுவேல் நீயர் அபாரமாக தடுத்தார். அவரது தடுப்பையும் மீறி எகிறிய பந்து கோல் கம்பத்தில் பட்டு மயிரிழையில் வெளியேறியது.
ஜெர்மனி அணியும் கோல் அடிக்க ஆக்ரோஷமாக விளையாடியது . 40-வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் ஜோஷ்வா கிம்மிச் பிரீகிக்கில் தூக்கி அடித்த பந்தை சக வீரர் அந்தோணி ருடிஜெர் தலையால் முட்டி கோல் வலைக்குள் புகுத்தினார். ஆனால் நடுவர் வீடியோ உதவியுடன் ஆய்வு செய்ததில் அது ‘ஆப்-சைடு’ என்று தெரியவந்தது. எனவே அது கோல் இல்லை என்று நடுவர் அறிவித்தார். முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. 2-வது பாதியிலும் இரு அணியினரும் துடிப்புடன் ஆடினார்கள். 55-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ஜோஷ்வா கிம்மிச் கோல் இலக்கை நோக்கி அடித்த பந்தை ஸ்பெயின் கோல்கீப்பர் சிமோன் அபாரமாக கணித்து தடுத்து நிறுத்தினார். 62-வது நிமிடத்தில் ஸ்பெயின் கோல் அடித்தது. அந்த அணியின் ஜோர்டி ஆல்பா கடத்தி கொடுத்த பந்தை மாற்று ஆட்டக்காரர் அல்வாரோ மோராட்டா கோல் வலைக்குள் திணித்தார்.
83-வது நிமிடத்தில் ஜெர்மனி அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணியின் ஜமால் முசிலா தட்டிக்கொடுத்த பந்தை மாற்று ஆட்டக்காரர் நிக்லாஸ் புல்குருக் கோல் வலைக்குள் அனுப்பினார். அதன் பிறகு இரு அணிகளும் வெற்றிக்குரிய கோலை அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. முதலாவது ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை துவம்சம் (7-0) செய்து இருந்த முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணி 4 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தில் இருக்கிறது. தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஜப்பானிடம் அதிர்ச்சி தோல்வி கண்ட 4 முறை சாம்பியனான ஜெர்மனி அணி ஒரு புள்ளியுடன் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. உலகக் கோப்பை போட்டி தொடரில் முதல் 2 ஆட்டங்களில் ஜெர்மனி அணி வெற்றி பெறாமல் போனது இதுவே முதல்முறையாகும். ஸ்பெயின் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜப்பானை (டிசம்பர் 1-ந் தேதி) சந்திக்கிறது. அதேநாளில் மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி-கோஸ்டாரிகா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டங்களில் ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் வெற்றி பெற்றால் இரு அணிகளும் எந்தவித பிரச்சினையும் இன்றி 2-வது சுற்றுக்குள் நுழையும். ஸ்பெயின் -ஜப்பான் ஆட்டம் டிராவில் முடிந்தால் ஜெர்மனி அணி கோஸ்டாரிகாவை வீழ்த்துவதுடன் கோல் வித்தியாசத்தில் ஜப்பானை முந்த வேண்டியது அவசியமானதாகும். ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்பான் வெற்றி பெற்றால், ஜெர்மனி வெளியேறும் நிலை ஏற்படும்.