தமிழரசுக்கும் கூட்டமைப்புக்கும் விரைவில் புதிய தலைவர்கள் தெரிவு – மாவை சேனாதிராஜா தகவல்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு விரைவில் நடைபெறவுள்ளது. அதன்போது தமிழரசுக் கட்சிக்குப் புதிய தலைவர் தெரிவு செய்யப்படுவார். அதன்பின்னர் தமிழரசுக் கட்சியினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய பங்காளிக் கட்சியினரும் இணைந்து கூட்டமைப்பின் புதிய தலைவரைத் தெரிவு செய்வார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைமைகள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தற்போது உடல் வலிமை குறைந்து இருந்தாலும் அவருடைய அனுபவம், அவருடைய ஆற்றல், அவர் வெளியிடும் சொற்கள் எப்போதும் வலிமையுடையவையாக இருக்கின்றன.
தந்தை செல்வாவும் தனது நீண்ட கால வரலாற்றில் உண்ண முடியாமல், நடக்க முடியாமல், உரைத்துப் பேச முடியாமல் இருந்த போதிலும் தமிழ் மக்கள் அவரை அங்கீகரித்து இருந்தார்கள். இறுதி வரைக்கும் அவர் அரசியல் தலைமைத்துவத்தைக் கொண்டிருந்தார். தமிழரசுக் கட்சியில் அவர் தலைவராக, செயலாளராக, பெருந்தலைவராகக் கூட இருந்துள்ளார். ஜனநாயக வழியில் அந்தப் பதவிகளுக்கு அவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆனாலும், எங்களுடைய தமிழரசுக் கட்சியிலே ஒரு நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது, இப்போதும் அது நடக்கப் போகின்றது.
கட்சியில் தந்தை செல்வா போல் யார் தலைவராக இருந்தாலும் ஓராண்டு அல்லது ஈராண்டுகளுக்கிடையில் மத்திய செயற்குழுவின் தீர்மானத்துக்கமைய நடைபெறுகின்ற மாநாடுகளில் நாங்கள் அடுத்தடுத்த தலைவர்களையும் தெரிவு செய்து வந்திருக்கின்றோம். மாநாட்டில் தலைவர் தெரிவு செய்யப்பட்டால் அவர்தான் கட்சியின் தலைவராகச் செயற்படுகின்ற நிலைமை இருக்கின்றது. இந்த நடைமுறை அனைத்துக் கட்சிகளிலும் இருக்கின்றது எனச் சொல்ல முடியாது.
விரைவில் எங்கள் தமிழரசுக் கட்சியின் செயற்குழு கூடும்; பொதுக்குழு கூடும். மாநாட்டுக்கான திகதியை டிசம்பரில் அல்லது சில மாதங்களுக்குள் நிர்ணயிக்கவுள்ளோம். அதற்கமைய கட்சியின் மாநாடு கூடி கட்சியின் புதிய தலைவரைத் தெரிவு செய்வோம். அதில் எந்தவிதமான தயக்கமும் கிடையாது. அதன்பின்னர் தமிழரசுக் கட்சியினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற ஏனைய பங்காளிக் கட்சியினரும் இணைந்து கூட்டமைப்பின் புதிய தலைவரைத் தெரிவு செய்வார்கள் என அறிவித்துள்ளார்.