தமிழ் மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை மீட்பதற்கு உதவுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரிக்கை

யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை மீட்பதற்கு உதவுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை காணிகள் கையளிக்கப்படவில்லை என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

கோவில்கள், பாடசாலைகளை இடித்து, ஹோட்டல்கள், பங்களாக்கள், வீடுகள், விகாரைகளை கட்டுவதன் மூலம் இந்த காணிகளை பாதுகாப்பு தரப்பினர் கையகப்படுத்தி உள்ளனர் என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதனால் அந்த காணிகளின் உரிமையாளர்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்து வருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் 95 வீதமான காணிகள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 5 வீதமான காணிகள் விரைவில் கையளிக்கப்படும் எனவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.