டிசம்பர் 11முதல் தேசிய இனப்பிரச்சனை தீர்வுக்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்க தீர்மானம்.

தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணும் பேச்சுக்களை தற்போதைய வரவு – செலவுத் திட்டம் முடிந்த கையோடு, அதையடுத்து டிசம்பர் 11ஆம் திகதி தொடங்கும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பங்குபற்றுதல்களுடன் விரைந்து நடத்தி முடிக்க இன்று நாடாளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டது.

சபையில் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய சமயம் எழுந்த குறுக்கீடுகளை அடுத்து, இது தொடர்பில் ஆக்கபூர்வமான வாதப் பிரதிவாதங்களும், கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்று தீர்மானம் எட்டப்பட்டது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார். இனப் பிரச்சினைத் தீர்வுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள், அதைத் தீர்க்காமல் நாடு மேலெழ முடியாது என்பவற்றையெல்லாம் அவர் விவரமாக விவரித்தார்.

வரும் 8ஆம் திகதி வரவு – செலவுத் திட்டம் முடிந்ததும் அடுத்து ஒரு நாள் நாடாளுமன்றம் இருக்கும், அது முடிந்ததும், டிசம்பர் 11ஆம் திகதி தொடங்கும் வாரத்தில் எல்லோரும் ஒன்று கூடி தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணும் முடிவை எடுப்போம்.

எல்லோரும் இணங்குகின்றீர்கள்தானே?’ – என்று ஜனாதிபதி கேட்டார்.தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்இ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், பிரதமர் தினேஷ் குணவர்த்தன எல்லோரும் அதற்குச் சம்மதம் தெரிவித்தனர்.அதைத் தமது முடிவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.