மீண்டும் பெரும்பான்மையை நிரூபித்தது ரணில் அரசு.

ஆர்.சனத்

?
பல்டி’ அடிப்பார் எனக் கூறப்பட்ட ராஜித பாதீட்டுக்கு எதிராக வாக்களிப்பு
?மைத்திரியுடன் நேற்று இருந்த துமிந்த இன்று ரணில் பக்கம்
?மரமும், மயிலும் போர்க்கொடி – குதிரை பச்சைக்கொடி
? இ.தொ.கா. ஆதரவு – முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 121 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஈபிடிபி, இ.தொ.கா., தேசிய காங்கிரஸ், முஸ்லிம் தேசியக் கூட்டணி உள்ளிட்ட கட்சியினர் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் 2 ஆம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி , தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, டலஸ் அணி, விமல் அணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் 2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு நவம்பர் 14 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது.
நவம்பர் 15 ஆம் திகதி முதல் இன்று (22) வரை 07 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.
இந்நிலையில் இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.
ஆளுங்கட்சி பக்கம் தாவுவார் எனக் கூறப்பட்ட ராஜித சேனாரத்ன எதிராக வாக்களித்தார். சுதந்திரக்கட்சி உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆதரவாக வாக்களித்தார். பாதீட்டை எதிர்க்கும் முடிவை சுதந்திரக்கட்சி எடுத்திருந்தது. இக்கூட்டத்துக்கு துமிந்த திஸாநாயக்கவும் சென்றிருந்தார்.
நாளை (23) முதல் குழுநிலை விவாதம் இடம்பெறும். டிசம்பர் 8 ஆம் திகதி மூன்றாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.