பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இடையே புதிய அரசியல் கூட்டணி.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் பொதுஜன பெரமுன அரசியல் கூட்டணி வைத்து ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை அறிவிக்க பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பஸில் நடத்திய கலந்துரையாடலின் போது மற்றுமொரு சிறப்பு பிரேரணையை முன்வைத்துள்ளதாக சிங்களப் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கட்சி யாப்பை முறையாகத் தயாரித்து மாநாட்டை நடத்தி பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இடையே புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது. பல்வேறு தந்திரோபாயங்களின் ஊடாக பொதுஜன பெரமுனவின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ஜனாதிபதி செயற்பட்டு வருவதாக தெரியவருகின்றது.

பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களாக கருதப்படும் நிமல் லான்சா போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பயன்படுத்தி ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றாா். ஆனால், தற்போது பொதுஜன பெரமுனவை பலப்படுத்தி ஜனாதிபதி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசியல் கூட்டணி அமைத்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜனாதிபதி வேட்புமனுவை வழங்க பஸில் திட்டமிட்டுள்ளார். அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய அரசியல் கூட்டணியுடன் பொதுத் தேர்தலில் போட்டியிடவும் பஸில் முன்மொழிந்துள்ளார்.