அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை வடக்கிற்கு பெற்றுத்தர நடவடிக்கை – ஜனாதிபதி
வடக்கின் பிரச்சினைக்குத் தீர்வு காணும்போது சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தயார் என்றும் 75 ஆவது சுதந்திர தின விழாவின்போதாவது இந்நாட்டின் அனைத்து மக்களும் ஒரு தாயின் பிள்ளைகளாக வாழ வேண்டுமென பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் செயற்படும், வடமாகாண அபிவிருத்தி விசேட பிரிவின் உப அலுவலகத்தை சனிக்கிழமை (19) வவுனியாவில் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
நீண்ட காலமாக வடக்கு மற்றும் தென்னிலங்கை மக்கள் பல்வேறு காரணங்களால் சிரமப்படுவதாகவும், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்க தாம் துரிதமாக செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வவுனியா மாவட்டத்தின் அரச ஊழியர்களுக்கான வீட்டுத் திட்டத்தின் மூலம் 120 பேருக்கு வீட்டு உறுதிப் பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அடையாளமாக 30 பேருக்கு வீட்டு உறுதிப்பத்திரங்களும் வடக்கில் யுத்தத்தின் காரணமாக சேதமடைந்த சொத்துக்களுக்கு இழப்பீடுகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் 96 பேரில் அடையாளமாக 12 பேருக்கு நிதியுதவியும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் வவுனியா மாவட்டத்தில் விவசாயிகளுக்கான உர விநியோகத்தை அடையாளப்படுத்தும் வகையிலும் இன்று சில விவசாயிகளுக்கு உரம் கையளிக்கப்பட்டன.
அங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது:
இந்த அலுவலகத்தில் இருந்தபடி வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட முடியும். யாழ்பாணத்திற்கு மட்டுமே அனைத்தும் வழங்கப்படுவதாக அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். தற்போது வவுனியாவிலும் அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவார். அமைச்சுக்களிலுள்ள அதிகாரிகளும் இந்த அலுவலகத்திற்கு நேரில் வந்து வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு முற்படுவார்கள் என நான் நம்புகின்றேன். அனைத்து மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.
பயங்கரவாதத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கும் வடக்கு மக்களுக்குள்ள பிரச்சினைகளுக்கும் நாம் தீர்வுகளை வழங்க வேண்டும். அதேபோன்றே, இலங்கை சமூகத்தில் தமக்குள்ள உரிமைகள் தொடர்பில் முஸ்லிம்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. மலையக மக்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இப்பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும் என்ற சமூக கருத்து நிலவுகிறது.
எனவே இந்த பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க இதுவே சிறந்த சந்தர்ப்பம். இந்தப் பிரச்சினைகள் முறையாகத் தீர்க்கப்பட வேண்டும். இது தொடர்பில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடவும் நாட்டைப் பிளவுபடுத்தாமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கவும் நான் எதிர்பார்க்கின்றேன்.
முதலில் மக்களின் சந்தேகங்கள் களையப்பட வேண்டும். நாம் அனைவரும் இணைந்து செயற்படும்போது அந்த சந்தேகம் நீங்கிவிடும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கிடைக்கும். 83 இல் இருந்து நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். அதுபோன்றே 2009 இல் இருந்தும் வெகுதூரம் வந்துவிட்டோம். எனக்கு தேசிய கீதத்தின் ஒரு வரி நினைவுக்கு வந்தது. அது, “ஒரு தாயின் பிள்ளைகளாக வாழ்வது” என்பதாகும். 75வது சுதந்திரதின விழாவின் போதாவது ஒரு தாயின் பிள்ளைகளாக வாழக்கூடியதாக இருக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.