ரஷ்ய ஏவுகணைக்கு போலந்தில் இருவர் பலி? அதனால் பெரும் பதற்ற நிலை!!

Kumarathasan Karthigesu

மறுக்கிறது மொஸ்கோ வார்ஸோவில் அவசர பாதுகாப்புக் கூட்டம்!!

ரஷ்ய ஏவுகணைகள் சில போலந்தில் உக்ரைன் நாட்டின் எல்லையை அண்டி அமைந்துள்ள கிராமம் ஒன்றைத் தாக்கியுள்ளன என்று கூறப்படும் சம்பவத்தால் அப்பிராந்தியத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் பிரதமர் வார்ஸோவில் அவசர பாதுகாப்புச் சபைக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்.

ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது இன்று பரவலாக நடத்திய பலத்த ஏவுகணைத் தாக்குதல்களின் போது போலந்தின் விவசாயக் கிராமம் ஒன்றில் இருவர் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது. உக்ரைன் எல்லையில்

இருந்து ஐந்து கிலோ மீற்றர்கள் தொலைவில் உள்ள பிரசிவோடோவ் (Przewodów) என்ற சிறிய போலந்துக் கிராமத்தில் விவசாய நிலங்களில் இரண்டு ஏவுகணைகள் வெடித்தன என்றும் அதிலேயே இருவர் உயிரிழந்தனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. உண்மையில் அங்கு என்ன நடந்தது என்பது இன்னும் – இந்த செய்தியை எழுதும் வரை – உறுதிப்படுத்தப்படவில்லை. வெடிச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது என்று கூறித் தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்று தீயணைப்பு அதிகாரி ஒருவர் உள்ளூர் வானொலி ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

தானியங்களை உலர்த்தும் தொழிற் பண்ணை ஒன்றின் அருகே உழவு இயந்திரம் ஒன்று வெடிப்பில் சிக்கிய படங்களை சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

ரஷ்ய ஏவுகணைகள் நேட்டோ கூட்டணி நாடாகிய போலந்தை தாக்கியுள்ளன என்ற தகவலை அமெரிக்காவின் சிரேஷ்ட உளவு அதிகாரிகளே முதலில் வெளியிட்டனர். அதனை அடுத்தே போலந்து பிரதமர் Mateusz Morawieckiஅவசர பாதுகாப்புச் சபைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். சம்பவம் குறித்த முழுமையான விவரங்கள் அந்தக் கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்படும் என்று போலந்து அரச பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

உக்ரைன் மீது இன்று செவ்வாய்க்கிழமை ரஷ்யா நடத்தியுள்ள ஏவுகணைத் தாக்குதல்கள் கடந்த பெப்ரவரி மாதம் போர் தொடங்கிய பின்னர் நிகழ்ந்துள்ள மிக மோசமான ஏவாயுதத் தாக்குதல் என்று சொல்லப்படுகிறது.

அந்த சமயத்தில் ஏவுகணைகள் சில போலந்து நாட்டின் மீதும் கடந்து சென்றன என்பதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

ரஷ்ய ஏவுகணைகள் போலந்து நாட்டில் வீழ்ந்தமை உறுதிப்படுத்தப்பட்டால் அது போரில் நேட்டோ அணி நாடு ஒன்று தாக்குதலுக்கு உள்ளான முதலாவது சம்பவமாக இருக்கும்.

போலந்து, வட அத்திலாந்திக் கூட்டணி (North Atlantic alliance) எனப்படுகின்ற நேட்டோவின் (NATO) உறுப்பு நாடு ஆகும்.நேட்டோ கூட்டணி உடன்பாட்டு விதிகளின் படி “ஐரோப்பாவிலோ அல்லது வட அமெரிக்காவிலோ உறுப்பு நாடு ஒன்றின் மீது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டால் அது மற்ற எல்லா உறுப்பு நாடுகள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும்”(An armed attack against one or more of them in Europe or North America shall be considered an attack against them all.”) போலந்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய வெடிப்புக்கு ரஷ்ய ஏவுகணையே காரணம் என்று குற்றம் சுமத்திய உக்ரைன் அதிபர் ஷெலென்ஸ்கி, மொஸ்கோவின் யுத்தம் உக்ரைனுக்கு மட்டும் எதிரானது அல்ல என்பதை மீண்டும் நினைவூட்டுவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் ரஷ்யா அதனை மறுத்துள்ளது.

போரை விரிவு படுத்தும் நோக்குடன் வேண்டும் என்றே செய்யப்படும் தூண்டுதல் இது என்று மொஸ்கோவில் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.