ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுமாறு பங்காளிக் கட்சிகள் கோரிக்கை.
ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் ஆகியன கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கு கடிதமொன்றை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர்.பல தடவைகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தைக் கூட்டுவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தாலும், அது பல காலமாக நடைபெறாமல் இருப்பது கவலைக்குரியது என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலைமை காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையிலான பரிமாற்றங்கள் சீர்குலைந்துள்ளதாகவும் குறித்த கடிதம் தொடர்கின்றது. இந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பாரிய நம்பிக்கை வைத்துள்ள தமிழ் மக்களுடைய எண்ணங்களில் குழப்பமும் சந்தேகமும் தோன்றுவதை அவதானிக்க முடிவதுடன், மக்கள் வௌிப்படையாகவே கூட்டமைப்பில் நிலவும் குழப்ப நிலைமைகளை முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்வைக்கப்ட்ட கோரிக்கை தொடர்பாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் வினவிய போது, கூட்டம் நிச்சயமாகக் கூட்டப்படும் என தெரிவித்தார்.