துருக்கி தலைநகரில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்!
Kumarathasan Karthigesu
அறுவர் பலி, 80 பேர் காயம்!!
துருக்கியின் தலைநகர் இஸ்தான்புலில் சனசந்தடி நிறைந்த கடைத் தெரு ஒன்றின் நடைபாதையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. பெண் தற்கொலைதாரி ஒருவர் நடத்தியதாக நம்பப்படும் அத்தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்தனர் எனவும் குறைந்தது 80 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
துருக்கியின் துணை அதிபர் ருவற் ஒக்ரே(Tuat Oktay) சம்பவம் நடந்த பகுதியைப் பார்வையிட்ட பிறகு, பெண் ஒருவர் குண்டை வெடிக்க வைத்து நடத்திய பயங்கரவாதத் தாக்குதல் அது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
துருக்கியின் செய்தி ஊடகங்கள் இராணுவப் பாணி உருமறைப்புக் (camouflage) கால் சட்டை அணிந்த பெண் ஒருவரது பாதுகாப்புக் கமெரா காட்சிகளை வெளியிட்டுள்ளன. அந்தப் பெண்ணே தன் உடலோடு எடுத்துவந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளார் என்று பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
முன்னதாக செய்தியாளர் மாநாட்டில் பேசிய அதிபர் ரெசெப் எர்டோகன் (Recep Tayyip Erdogan), குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த சகோதர சகோதரிகளுக்கு அல்லாவின் கருணையை வேண்டுவதாக அறிவித்தார். பயங்கரவாதத்தின் மூலம் துருக்கிய அரசையும் நாட்டையும் அடிபணியச் செய்வது ஒருபோதும் வெற்றியளிக்காது என்று அவர் தெரிவித்தார்.
துருக்கியின் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 16.20 மணியளவில் பெரும் எண்ணிக்கையானவர்கள் கூடியிருந்த ஒர் அவனியூவில் இத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. நால்வர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். இருவர் மருத்துவ மனையில் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை மீட்பதற்காக அம்புலன்ஸ் வண்டிகள் அங்கு நிறைந்து காணப்பட்டன. குண்டு வெடித்த இடத்துக்கு அருகே அமைந்துள்ள தக்ஷிம் சதுக்கப் பகுதியில் (Taksim Square) பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெண் ஒருவருடன் இரண்டு ஆண்களும் இந்தத் தாக்குதலில் தொடர்புபட்டிருப்பதாக விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர். எப்போதும் சனக் கூட்டம் நிரம்பிக் காணப்படுகின்ற இதே தெருவில் கடந்த 2016 ஆம் ஆண்டிலும் ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றிருந்தது.
குர்திஷ்தான் தீவிரவாதிகளே இத்தாக்குதல்களின் சூத்திரதாரிகள் என்று துருக்கி குற்றம் சுமத்தியுள்ளது.