நாட்டில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் மூடப்படும்-அசேல சம்பத்.

எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் அரசாங்கம் முட்டை பிரச்சினைக்கு தீர்வினை பெற்று தர வேண்டும் என்றும் இல்லையேல்  நாட்டில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் மூடப்படும் என்றும் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

தற்போது சந்தைகளில்  கட்டுப்பாட்டு விலைக்கும் அதிகமான விலைகளில் முட்டை விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை முட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக அதிகளவிலான  வகையில் தண்டப்பணம் விதித்துள்ளது. இதனை நாம் வரவேற்கிறோம்.

மேலும் அரசாங்கம், விவசாய அமைச்சு இணைந்து முட்டை தொடர்பிலான பிரச்சினைகளை முட்டை விநியோகம் செய்யும் சங்கங்களுடன் இணைந்து கலந்தாலோசித்து  பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

தொடர்ச்சியாக முட்டை தொடர்பில் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை என்றால் சிறுவர்கள், வயோதிபர்கள், நோயாளர்கள், பேக்கரி உற்பத்தியாளர்கள், மற்றும் முட்டையை அடிப்படையாக கொண்டு தொழில் புரிபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அவர்களின் சீவனோபாயம் பாதிக்கப்படும்.

நாட்டில் முட்டையின் விலை அதிகரிப்பு, முட்டை தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு இவை இரண்டுக்கும் இடையில் உணவு உற்பத்திகள், சிற்றுச்லைகள் முற்றாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 எனவே இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். இந்த பிரச்சினைக்கு தீர்வு பெற்ற தரவில்லை என்றால் அனைத்து சிற்றுச்சாலைகளும் மூடும் நிலை ஏற்படும்.

மேலும் அரசாங்கம் முட்டையை சாதாரண விலைக்கு பெற்றுத் தருவதோடு சந்தையில் நிலவும் முட்டை தட்டுப்பாட்டுக்கும் தீர்வு பெற்று தர வேண்டும் என்றார்.