பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் 125 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குறைந்தது 129 பேர் சிறையில் உள்ளமைத் தெரியவந்துள்ளது. இவர்களில் 125 பேர் விளக்கமறியலில் உள்ளதாக தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் உத்தரவிற்கு அமைய இலங்கை பொலிஸார் வழங்கிய தகவலின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்களை வழங்குமாறு, தகவல் அறியும் உரிமையின் கீழ், ஜூலை 2021இல் செய்யப்பட்ட கோரிக்கை பொலிஸாரால் நிராகரிக்கப்பட்ட பின்னர், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மனித உரிமைகள் ஆணையாளராக செயற்பட்ட அம்பிகா சத்குணநாதன் மேன்முறையீடு செய்ததையடுத்து, ஒக்டோபர் 26ஆம் திகதி ஆணைக்குழு உத்தரவிட்டிருந்த நிலையில் தகவல்களை வெளியிட வேண்டிய நிலைமை பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு ஏற்பட்டது.
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பெரும்பாலானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த எண்ணிக்கை 81 ஆகும். அவர்களில் 42 பேர் உயர்நீதிமன்றத்தினாலும், 39 பேர் நீதவான் நீதிமன்றத்தினாலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 44 பேர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின்றி இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும்,  மற்றையவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், பொலிஸாரின் புள்ளிவிபரங்களுக்கும் சிறைச்சாலை புள்ளிவிபரங்களுக்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாக முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் கூறுகிறார்.
“2021 ஓகஸ்டில் சிறைச்சாலை புள்ளிவிபரத் திணைக்களத்தின் தகவல்களுக்கு அமைய, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆகும். 85 பேர் விளக்கமறியலில் உள்ளனர். 205 பேர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆகவே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 298 ஆகும்” என சட்டத்தரணி அம்பிகா சத்குணநாதன் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
அவர்களில் பெரும்பாலோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறுகிறார்.
கலாநிதி தீபிகா உடகம தலைமையிலான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளராக சட்டத்தரணி சத்குணநாதன் கடமையாற்றிய போது, பயங்கரவாதச் சட்டங்களைப் பயன்படுத்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
சிங்களவர் அல்லாத இனங்களை ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் கொடூரமான சட்டமாக குறிப்பிடப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டம், அண்மையில் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகிய இரு மாணவர் தலைவர்களின் கைதுடன்  தென்னிலங்கையில் பேசுப்பொருளானது.