மின்சாரம் தாக்கி பலியான தோட்டத் தொழிலாளி இராமகிருஸ்ணனுக்கு நட்டயீடாக 45 இலட்சம் ரூபா

தி.தர்வினேஷ்

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட டயகம கிழக்கு 03ஆம் பிரிவு தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பலியான தோட்டத் தொழிலாளியும், மூன்று பிள்ளைகளின் தந்தையுமாகிய இராமகிருஸ்ணனுக்கு அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிர்வாகம் நட்டயீடாக 45 இலட்சம் ரூபாவும் வாழ்வாதாரத்தை முன்னெடுத்து செல்ல காணி ஒன்றும் வழங்க இனங்கியுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர் மட்ட குழுவின் உறுப்பினர்களான காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான்,தலைவர் செந்தில் தொண்டமான்,
காங்கிரஸ் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஸ்வரன், உள்ளிட்ட குழுவினருக்கும், அக்கரப்பத்தனை பெருந் தோட்ட முகாமைத்துவ கம்பணியினருக்கும் இடையில் கொழும்பு தொழில் அமைச்சில் (08) காலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

டயகம கிழக்கு 03பிரிவு தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியான இராமகிருஸ்ணனுக்கு இழப்பீட்டு நட்டயீடு வழங்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழில் அமைச்சு,மற்றும் தொழில் ஆணையாளர் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தது.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளிக்கு வயது 45 ஆகும்.
குறித்த தொழிலாளி, தொழிற்சாலை உத்தியோகத்தரின் பணிப்பின் பேரில்,அவரின் வசிப்பிடம் அமைந்துள்ள இடத்திற்குறிய விவசாய தோட்டத்திற்கு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

இதன்போது அங்கு விவசாய தோட்டத்தில் பயிர்களை விலங்குகளிடமிருந்து பாதுகாப்புக்கு பொறுத்தப்பட்டிருந்த மின்சார வேலியிலிருந்து பாய்ந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக கடந்த (05) நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் தொழில் திணைகளத்தின் ஆணையாளர், மற்றும் அக்கரபத்தனை பெருந்தோட்ட யாக்கத்தின் அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது மின்சாரம் தாக்கி பலியான தோட்ட தொழிலாளிக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பாக இ.தொ.கா சார்பாக பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்தது .

மேலும் மின்சாரம் தாக்கி பலியான இராமகிருஸ்னன் அவர்களின் பிள்ளைகளின் கல்வி செலவை முழுமையாக தோட்ட நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்தோடு உயிரிந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு சுயத்தொழிலை மேற்கொள்ள காணி வழங்குதல் வேண்டும்.
உயிரிழந்த இராமகிருஸ்ணனின் இறுதி சடங்கின் முழுமையான செலவை தோட்ட நிர்வாகம் ஏற்றுகொள்ள வேண்டும் என பல நிபந்தனைகளை காங்கிரஸ் முன்வைத்தனர்.

இந்த நிலையில் (08) இன்று மீண்டும் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் உயிரிழந்த தொழிலாளி இராமகிருஸ்னனின் குடும்பத்திற்கு 45 லட்சம் நிவாரண நட்டயீடு வழங்க தோட்ட கம்பனி இணக்கம் தெரிவித்ததுடன்,வாழ்வாதாரத்தை முன்னெடுத்து செல்ல காணியும் வழங்குவதாக இணங்கியுள்ளது.

அந்த வகையில் இது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்க்கு கிடைத்த இரண்டாவது வெற்றியெனவும் காங்கிரஸ் உயர் பீடம் தெரிவித்தது.