சீனாவின் கப்பலை நங்கூரமிடுவதற்குஅனுமதி வழங்கினால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு: அண்டை நாடுகளுக்கு இந்தியா எச்சரிக்கை.
தமது நாட்டின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் நுழைவதற்கு சீன உளவு கப்பலான யுவான் வாங் – 6க்கு அனுமதி வழங்கப்படாது என இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவின் ஒடிசா பகுதியிலுள்ள அப்துல் கலாம் சோதனை நிலையத்திலிருந்து இந்தியா அனுப்பவுள்ள ஏவுகணை பரிசோதனைகளை கண்காணிப்பதற்காக விசேடமாக அனுப்பப்பட்ட சீனா இராணுவத்தின் உளவு கப்பல் இது என்கின்ற நிலையில், இந்த கப்பல் ஆராய்ச்சி கப்பல் என உத்தியோகபூர்வமாக பதியப்பட்டுள்ளது.
பங்களதேஷின் சிட்டகொங்கில் இந்த கப்பலை நங்கூரமிடுவதற்கோ அல்லது இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இந்த கப்பலை நங்கூரமிடுவதற்கோ அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், அது தமது நாட்டின் அண்மித்த பகுதி என்பதனால், யுவான் வாங் -6 கப்பலினால் கண்காணிக்க முடியும் என இந்தியா தெரிவித்துள்ளது.
சீனாவின் கப்பலை நங்கூரமிடுவதற்கு, அண்மித்த நாடுகள் அனுமதி வழங்கினால், அது தமது நாட்டிற்கு பிரச்சினையாக அமையும் எனவும் இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.இந்த கப்பலின் செயற்பாடுகளை தாம் தொடர்ச்சியாக அவதானித்து வருவதாகவும், தமது விண்வெளி கண்காணிப்புகள் அந்த கப்பலை கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். இம்முறை யுவான் வாங் கப்பல் தனது பொருளாதார வலயத்திற்குள் நுழைய முயற்சித்தால்,சி யான் கப்பல் விவகாரத்தில் நடந்துக்கொண்டதை போன்றே இந்தியா நடந்துக்கொள்ளும் எனவும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
சீனா கப்பல் எங்கு செல்கின்றது என இதுவரை அறிவிக்கப்படவில்லை என கூறியுள்ள இந்திய அதிகாரிகள், அந்த கப்பல் சர்வதேச கடற்பரப்பிலேயே பயணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.