இரட்டைக் குடியுரிமை பெற்ற 10 பேர் நாடாளுமன்றத்தில்: சரத் பொன்சேகா தெரிவிப்பு

நாடாளுமன்றத்தில் தற்போது சுமார் பத்து இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் உள்ளனர் என்றும் அவர்களைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினம் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

மேலும் குடிவரவுத் திணைக்களத்தில் இரட்டைக் குடியுரிமைக்காக ஜனாதிபதியும் கையொப்பமிடுவதால், அரச தலைவர் என்ற முறையில் ஜனாதிபதி அலுவலகமும் தேவையான ஆவணங்களைக் கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.கண்டியில் இடம்பெற்ற கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் அமர முடியாது என்பது இப்போது அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டுச் செயல்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் சுமார் பத்து பேர் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் யார் என்று தெரியவில்லை என்பதுடன், அவர்களைப் பற்றிய விபரங்கள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வது கடினம் என அவர் தெரிவித்தார்.

இரட்டைக் குடியுரிமை பெற்றதன் மூலம்,  குறித்த நபர் இந்த நாட்டில் தனது குடியுரிமையை இழக்கிறார். அதன் காரணமாக அவர் மீண்டும் இந்த நாட்டில் தனக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குமாறு கோர வேண்டும் என்றும் அதன்பின்னர் அந்த நபர் குடிவரவுத் திணைக்களத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இரட்டைக் குடியுரிமை நாட்டின் அரச தலைவரால் அங்கீகரிக்கப்பட்டது என்றும் எனவே, அது ஜனாதிபதி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, நாடாளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிவது அவ்வளவு கடினம் அல்ல என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.