எந்தத் துறைகளில் வெளிநாட்டவருக்கு வதிவிட உரிமை கிட்ட வாய்ப்பு?

Kumarathasan Karthigesu

சமையல் உணவகப் பணி மூன்று லட்சம் பேர் தேவை ,போக்குவரத்து – 50 ஆயிரம் ,கட்டட தொழில் – 80 ஆயிரம்.

பிரான்ஸில் ஆட்பற்றாக்குறையால் தடுமாறுகின்ற சில தொழிற்றுறைகளைப் பாதுகாப்பதற்காக அவற்றில் சட்டவிரோதமாக அல்லது போதிய ஆவணங்களின்றித் தொழில் புரிகின்ற வெளிநாட்டவருக்குத் தற்காலிக வதிவிட அனுமதி (un titre de séjour) வழங்கும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அரசு அறிவித்திருப்பது தெரிந்ததே.

அந்த அறிவிப்பு உரிய வதிவிட ஆவணங்கள் இன்றித் தொழில் புரிகின்ற ஆயிரக்கணக்கான வெளிநாட்டினருக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.

“பேப்பர் இல்லாமல்” அல்லது “களவாக” வேலை செய்தல் என்று தமிழர்களால் குறிப்பிடப்படுகின்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கின்ற வெளிநாட்டுக் குடியேறிகளை அந்தச் செய்தி பெரிதும் ஈர்த்திருக்கிறது.

ஆட்பற்றாக்குறையால் நெருக்கடியில் இயங்குகின்ற தொழிற்றுறைகள், அவற்றில் உள்ள வெற்றிடங்களின் புள்ளி விவரங்களைச் செய்தி ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன.

புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இந்தத் துறைகளில் ஏதாவது ஒன்றில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டவர்கள் அதனை அடிப்படையாகக் கொண்டு வதிவிட அனுமதி பெறுவதற்கு வாய்ப்புண்டு.

கொரோனா வைரஸ் நெருக்கடியை அடுத்து உணவகங்கள் அருந்தகங்கள் மற்றும் ஹொட்டேல், உணவு விநியோகம் ஆகிய துறைகளை விட்டுப் பலர் வெளியேறியுள்ளனர். அதனால் இந்தத் துறைகள் பெரும் ஆட்பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளன. தொழில் அமைச்சின் புள்ளிவிவரப்படி ஹொட்டேல் மற்றும் உணவகத் துறையில்(l’hôtellerie et la restauration)  சுமார் மூன்று லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. அதேபோன்று கட்டட வேலைகளில் (le bâtiment) 50 ஆயிரம் வெற்றிடங்களும், வாகன சாரதிகள் போன்ற போக்குவரத்துத் துறைகளில் (les transports) 80 ஆயிரம் வெற்றிடங்களும் உள்ளன.

இவற்றைவிட, மருத்துவப் பகுதி (secteur médical et du domicile) பராமரிப்பாளர்கள், முதியோர் பராமரிப்புப் போன்ற வீடுகளுக்குச் சென்று சேவை செய்வோர் (Aides à domicile et aides ménagères) போன்ற வேலைகளுக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் தேவையாகவுள்ளனர்.

புதிய சட்டப் பிரேரணையின் படி இவற்றில் ஏதேனும் ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்கின்ற வெளிநாட்டவர்கள் தங்கள் தொழில் வழங்குநரது அனுமதிக்குக் காத்திருக்காமலேயே தாங்களாக வதிவிட அனுமதி கோரி விண்ணப்பிக்க முடியும். அத்துடன் வேலை ஒன்றைத் தேடுவதற்கும் அவர்கள் ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டியது அவசியமில்லை. வதிவிட அனுமதிக் காலம் எவ்வளவு என்பது இன்னமும் தெரியவரவில்லை. வதிவிட அனுமதி கிடைத்தவர்கள் தங்கள் வேலைக் காலத்தில் பிரெஞ்சு மொழி கற்பதற்கு வேலை வழங்குநர்கள் அனுமதிக்க வேண்டும்.