2022ஆம் ஆண்டில் 71 செய்தியாளர்கள் உலகில் கொல்லப்பட்டுள்ளனர்.
2012ஆம் ஆண்டு முதல் இதுவரை உலகில் 955 செய்தியாளர்கள் தங்கள் பணிகளின்போது கொலை செய்யப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ நிறுவனத்தின் உயர் இயக்குனர் Audrey Azoulay தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு எதிரான குற்றங்கள் தண்டிக்கப்படாமல் செல்வதை தடுப்பதற்குரிய விழிப்புணர்வு நாள் நவம்பர் 2ம் தேதி, இப்புதனன்று கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி அந்நாளுக்கென வெளியிட்டுள்ள செய்தியில், இவ்வாறு கூறியுள்ளார், யுனெஸ்கோ உயர் இயக்குனர்.
மக்களாட்சிக்கு பெரும் தூண்களாக நின்று, தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் செய்தியாளர்களின் பாதுகாப்பிற்கு மக்கள் ஒவ்வொருவரும் ஆற்றவேண்டிய கடமையை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள உயர் இயக்குனர் Azoulay அவர்கள், இதுவரை யுனெஸ்கோ நிறுவனம், செய்தியாளர்கள் பாதுகாப்புத் தொடர்பாக, நீதித்துறைத் தொடர்புடையவர்கள் 24,000 பேருக்கும், சட்டம், மற்றும் பாதுகாப்புத் தொடர்புடையவர்கள் 11,500 பேருக்கும் பயிற்சிகளை வழங்கியுள்ளதையும் எடுத்துரைத்துள்ளார்.
இவ்வாண்டில் மட்டும் இதுவரை 71 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளது குறித்த கவலையும் இச்செய்தியில் அவரால் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், செய்தியாளர்களைக் கொலைசெய்தவர்களுள் 90 விழுக்கட்டினர் எவ்வித தண்டனையுமின்றி தப்பிச் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யுனெஸ்கோ புள்ளிவிவரங்களின்படி, பெண் பத்திரிகையாளர்களுள் நான்கிற்கு மூவர் பணியின்போது அச்சுறுத்தல் மற்றும் கொடுமைகளைச் சந்தித்துள்ளதாகவும் ஆய்வுகள் வழி தெரிய வந்துள்ளது.
2021ஆம் ஆண்டு இந்தியாவில் 6 செய்தியாளர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.
2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரு செய்தியாளர்கள் மாலி நாட்டில் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதை நினைவுகூரும்விதமாக அவ்வாண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 2ம் தேதி, செய்தியாளர்களுக்கு எதிரான குற்றங்கள் தண்டிக்கப்படாமல் போவதை முடிவுக்குக்கொணரும் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.
‘மக்களாட்சியை காப்பாற்ற ஊடகவியலை காப்பாற்றுதல்’ என்ற தலைப்பில் 2022ம் ஆண்டின் இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி நவம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் ஆஸ்ட்ரியாவின் வியென்னாவில் இரு நாள் அனைத்துலக கருத்தரங்கு இடம்பெற உள்ளது.